வாய்ப்புகள் வரும்போது அதனை விட்டுவிடாதீர்கள் - சூர்யா


வாய்ப்புகள் வரும்போது அதனை விட்டுவிடாதீர்கள் - சூர்யா
x

அகரம் நிறுவனத்தில் இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

நேற்று 'ரெட்ரோ' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இணைந்து பிரபல நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் கலந்து கொண்டார். படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "வாய்ப்புகள் வரும்போது அதனை விட்டுவிடாதீர்கள். ஒருதருக்கு அவரது வாழ்க்கையில் மூன்று முறை வாய்ப்புகள் கிடைக்கும், அதனைத் தவறவிட்டு விடாதீர்கள். நான் இங்க வந்தபோது பலரும் என்னிடம் நல்லா இருக்கீங்களா? எனக் கேட்டனர். உங்களின் அன்பு இருந்தால்போதும் எப்போதும் நான் நன்றாக இருப்பேன். வாழ்க்கையை நம்புகள். வாய்ப்புகளைத் தவறவீடாதீர்கள். ரெட்ரோ படத்தில் நானும் பூஜா ஹெக்டோவும் வாழ்க்கைநோக்கம் பற்றி பேசுவோம். ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? என் வாழ்க்கையின் நோக்கம் அகரம் பவுண்டேஷன். ஒரு நடிகராக இருப்பதைவிட அகரம் நிறுவனத்தைப் பலரிடமும் கொண்டு சேர்த்ததைத்தான் பெரிதாக நினைக்கிறேன். இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம். இதை சாத்தியப்படுத்திய அகரம் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி." எனத் தெரிவித்தார்.

1 More update

Next Story