எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் என் திருமணத்துடன் இணைத்து பேசுகிறார்கள் - நடிகை மீனா

என் திருமணத்தில் ரசிகர்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை என்று நடிகை மீனா கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் உச்ச நடிகையாக வளர்ந்தவர் நடிகை மீனா. இவர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். மீனா, ரஜினிகாந்துடன், எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.
மீனா தனது கணவர் வித்யா சாகரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இழந்தார். வித்யா சாகர் 2022-ல் நுரையீரல் தொற்று காரணமாக 48 வயதில் காலமானார்.இதனையடுத்து, தனது மகளுடன் மீனா வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், மீனா இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு ஆளானார். மகளை கவனித்துக் கொண்டு படங்களில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “மக்கள் ஏன் என் திருமணத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. எப்போதும் என் திருமணத்தை பற்றி பேசுகிறார்கள். நான் என் மகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் எனக்கு இல்லை, எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் அதை என் திருமணத்துடன் இணைத்து பேசுகிறார்கள். அந்த நடிகருடன் 2-வது திருமணம் செய்து கொள்வதாக விளம்பரப்படுத்துகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை இப்போது நான் நடிப்புக்கு முன்னுரிமை அளிக்கிறேன்” என்று கூறினார்.






