நான் சினிமாவின் குழந்தை - கமல்ஹாசன்


நான் சினிமாவின் குழந்தை - கமல்ஹாசன்
x

அதிக சினிமா தயாரிக்கும் இந்த நாட்டில் ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோ இருப்பது அவசியம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் வேல்ஸ் வர்த்தக மையம், வேல்ஸ் பிலிம் சிட்டி மற்றும் வேல்ஸ் திரையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

இந்நிகழ்வில் அவர் “கமல்ஹாசனுக்கும் ஐசரி கணேசனுக்கும் என்ன சம்பந்தம். நான் வேல்ஸ் நிறுவனத்தில் படம் செய்ததில்லை, ராஜ்கமலுடன் அவர் சேர்ந்து படம் செய்ததில்லை. ஆனால், என்னையும் அவரையும் சேர்க்கும் நட்பின் காரணம், எம் ஜி ஆர். அவர்தான் எங்களை சகோதரர்களாக மாற்றினார். நான் சினிமாவின் குழந்தை, எனக்கு அதை தவிர எதுவும் தெரியாது. சினிமா தேய்ந்து கொண்டிருப்பது போன்ற பயம் 25 வருடங்களுக்கு முன்பு எனக்கு வந்தது.

ஏனென்றால் 17 தளங்கள் கொண்ட ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோ என்று இருந்த இடத்தை எதிர் ஸ்டுடியோவில் இருந்து பார்த்து பொறாமைப்பட்டு இருக்கிறேன்.20 தளங்கள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோ வந்துவிட்டது. பேன் இந்தியா மூவி என்பதை துவங்கியதே சென்னை தான். பேன் இந்தியா பட மேக்கிங் என்றால் அது சென்னைதான். மும்பையிலும் பெரிய இண்டஸ்ட்ரி இயங்கி வருகிறது என்றாலும், அவர்கள் அந்த மொழியில் மட்டுமே படம் எடுப்பார்கள். அதிக சினிமா தயாரிக்கும் இந்த நாட்டில் இப்படி ஒரு ஸ்டுடியோ இருப்பது அவசியம் என்பதை ஒரு அரசு முடிவு செய்யாமல், தனி மனிதன் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

இதை நாங்கள் அல்லவா செய்திருக்க வேண்டும் என இங்கிருக்கும் ஒவ்வொரு சினிமாக்காரர்கள் மனதிலும் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. சரி செய்யவில்லை என்றால் என்ன, இங்கு வந்து வேலை செய்துவிட்டு போகிறேன். இங்கே இன்னும் நிறைய வரவேண்டும். நாம் சினிமாவை கற்றோம். ஆனால் எங்கு கற்றோம் என சொல்ல முடியவில்லை. நான் ஏவிஎம் போன்ற சில இடங்களில் கற்றேன். ஒருவேளை அது கிடைக்காமல் போயிருந்தால் என்ன செய்வது என நடுக்கமாக இருக்கிறது. அந்த நடுக்கம் வரும் தலைமுறைக்கு இல்லாமல் இருக்க, சினிமா பயிலும் அரங்கத்தையும் இங்கே ஏற்படுத்த வேண்டும். நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய மறந்து விட்டதாக நினைக்கிறேன். நான் சொல்வது அரசாங்கத்தை அல்ல, இந்த துறை அதனை செய்ய வேண்டும். இதெல்லாம் எனக்கு முன்பே தெரியாதா என்றால், தெரியும். ஆனால் இதை எல்லாம் செய்யக்கூடிய வசதி படைத்தவர்களை இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது” என்றார்.

1 More update

Next Story