சின்மயிக்கு பாட வாய்ப்பளிப்பேன் - விஜய் ஆண்டனி
‘தக் லைப்’ இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'தக் லைப்' திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான 'முத்த மழை' பாடல் இடம்பெறாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன. 'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அந்த பாடலை வைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை எழுந்த நிலையில், கடைசியாக அந்த பாடல் படத்தில் இடம்பெற வில்லை. ஆனால் 'தக் லைப்' ஆல்பத்தில் 10-வது பாடலாக சின்மயி வெர்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவரை பாடக் கூடாது என்றும் டப்பிங் செய்யக் கூடாது என்றும் தடைகள் விதிக்கப்பட்டன. சமீபத்தில் நடைபெற்ற 'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் பாடகி தீ பங்கேற்காத நிலையில், 'முத்த மழை' பாடலின் தமிழ் வெர்ஷனை மேடையில் ஏறி சின்மயி பாடியிருந்தார். அது ரசிகர்களை அதிகம் ஈர்த்த நிலையில், அவர் மீண்டும் தமிழில் பாட வேண்டும் என்கிற கோரிக்கையை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். தீ பாடியதை விட பெரும்பாலான ரசிகர்கள் சின்மயி குரலை அதிகம் விரும்புகிறார்கள். 'இப்படிபட்ட குரலையா பாடவிடாமல் தடை விதித்திருக்கிறார்கள்' என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து ஆடியோ லாஞ்சில் சின்மயி பாடிய காணொளி யூடியூபில் வெளியானது.
இந்நிலையில், 'மார்கன்' படத்தின் புரமோஷனுக்கு வந்த விஜய் ஆண்டனியிடம் சின்மயிக்கு சான்ஸ் கொடுப்பீங்களா? என்கிற கேள்விக்கு கண்டிப்பாக, 'சீக்கிரமே படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்திருக்கிறேன். அவரை நிச்சயம் என்னுடைய இசையில் பாட வைப்பேன்' என்றார்.
ஏற்கனவே 'நம்பியார்' படத்தில் விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.