நம்பிக்கையை காப்பாற்ற கடினமாக உழைப்பேன் - இயக்குநர் சிபி சக்ரவர்த்தி


நம்பிக்கையை காப்பாற்ற கடினமாக உழைப்பேன் - இயக்குநர் சிபி சக்ரவர்த்தி
x
தினத்தந்தி 3 Jan 2026 3:02 PM IST (Updated: 3 Jan 2026 3:12 PM IST)
t-max-icont-min-icon

ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.

சென்னை,

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார்.

இந்த நிலையில், ‘தலைவர் 173’ படத்தை‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்ற அறிவிப்பு இன்று வெளியானது. இப்படம் 2027 பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தை இயக்குவது குறித்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்தப் பதிவில் “ஒரு சிறு நகரத்திலிருந்து வந்த பையனுக்கு பெரிய கனவாக இருந்ததே, அவனுடைய ஆதர்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டாரை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுப்பதே. அதுவே அவனை சினிமாவை நோக்கி அழைத்து வந்தது. அந்தக் கனவும் ஒரு நாள் நிறைவேறியது. அதன்பின் அவனுக்கு தன் சூப்பர்ஸ்டாரை இயக்க வேண்டும் என்ற கனவு உருவானது. அதன் அருகில் வரை சென்றும், தவறிப்போனது. ஆனாலும் அது ஒரு நாள் நடக்கும் என அவன் தொடர்ந்து நம்பினான். அந்த நாள் இதுதான். ‘தலைவர் 173’ நாள்.

எனக்கு தலைவர் சொன்னது நினைவுக்கு வந்தது ‘கனவுகள் மெய்ப்படும்’, ‘அற்புதங்கள் நிகழும்’.சில நேரங்களில் வாழ்க்கை நம் கனவுகளுக்கு அப்பால் சென்றுவிடுகிறது. நம் கனவுகளைக் காட்டிலும் மிகப்பெரியது நடைபெறுகிறது. அப்படித்தான் சூப்பர் ஸ்டார் படத்துக்கு கமல், மகேந்திரன் ஆகியோர் தயாரிப்பாளர்களாக அமைந்துள்ளனர். அதற்காக நன்றியுடன் இருப்பேன். நீங்கள் எல்லோரும் என் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற எனது இதயத்தையும், ஆன்மாவையும் செலுத்தி உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story