வெற்றிமாறன் இல்லை என்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது - சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் சூரி. பின்னர் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற மே 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், மகிமா நம்பியார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தை எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மண்டாடி என்பது கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர், நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்பி படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது
பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியதாவது " என்னோட மண்டாடி படத்தின் தொடக்கத்திற்கு இவ்வளவு பிரம்மாண்டமாக செய்ததற்கு ரொம்ப நன்றி. வெற்றிமாறன் மட்டும் இல்லை என்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. விடுதலை படத்திற்கு முன் எனக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. அது சுசீந்திரன் மூலமாகத்தான் நடந்தது. அதன் பிறகு என்னை ஒரு ஹீரோவாக நடிக்க வைத்து இப்போது இவ்வளவு சம்பாதித்து இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் வெற்றிமாறன்தான். எதுவுமே இல்லாமல் தான் வந்தேன் .ஆனால் இப்போது என் தகுதிக்கு மீறி சம்பாதித்து விட்டேன் .இது போதும். இனிமேல் சினிமாக்களில் நல்ல நல்ல படங்களில் நடித்து இப்படியே இருந்தால் போதும்" என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.






