சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை

இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
1976-ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கியும் உள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, தன்னை அடையாளப்படுத்தும் புகைப்படம், பெயர், இசைஞானி பட்டம், குரல் எதையும் பயன்படுத்தக் கூடாது; சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






