"அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது"- 'வா வாத்தியார்' பட விழாவில் கார்த்தி

வா வாத்தியார் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
சென்னை,
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வருகிற 12-ந்தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘வா வாத்தியார்’. படத்தில் கிருத்திஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், சில்பாமஞ்சுநாத், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இைச அமைத்துள்ளார்.
ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-
இயக்குனர் நலன்குமாரசாமியுடன் பணிபுரிந்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வேற லெவலில் இருந்தது. ‘வா வாத்தியார்’ படத்தின் கதையை கேட்டதும் நம்மால் செய்ய முடியுமா என்று யோசிக்கிறேன்.
நாம் எத்தனை தடவை ஜெயித்தாலும் தோற்றதை மட்டும்தான் பேசுகிற உலகம் இது. அப்படி பயந்து கொண்டே இருந்தோம் என்றால் புதிய விஷயம் பண்ண முடியாது. இறங்கி அடித்து விட வேண்டும் என்று தான் நலன் கூட இணைந்தேன். புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என அவ்வளவு பெயரை மக்கள் எம்.ஜி.ஆருக்கு வைத்துள்ளார்கள். அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது. அவர் வாழ்க்கையில் சந்திக்காத கஷ்டம் கிடையாது. அவர் தமிழ் சினிமாவை மாற்றி உள்ளார். அரசியலை மாற்றியுள்ளார். மக்களை மாற்றி உள்ளார். வாழ்க்கையே மக்கள் பணியாக இருக்க வேண்டும் என செயல்பட்டார். மக்களுக்கு நன்மை செய்வதே என் வேலை என பணி புரிந்தார். பக்தியுடன் எம்.ஜி.ஆர். கேரக்டரை நான் பண்ணியிருக்கிறேன். இந்த படம் எனக்கு புது அனுபவம் நமக்கு சூப்பர் ஹீரோவாக வந்தவர் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் கிருத்தி ஷெட்டி நான் உங்களுடைய ரசிகை என சொல்லி என்னை வெட்கப்பட வைத்து விடுவார்.
படப்பிடிப்பில் இயக்குனர் நலன் ஆக்சன் சொல்லும் போது எம்.ஜி.ஆரிடம் நீங்களே என் மனதிற்குள் இருந்து நடித்து விடுங்கள் என அவரிடம் வேண்டிக் கொள்வேன். எம்.ஜி.ஆர். ஆசிர்வாதத்துடன் படம் நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.






