நடத்தையில் சந்தேகம்: நடிகையை கத்தியால் குத்திய கணவர்


நடத்தையில் சந்தேகம்: நடிகையை கத்தியால் குத்திய கணவர்
x
தினத்தந்தி 12 July 2025 4:35 AM IST (Updated: 12 July 2025 5:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை மஞ்சுளா என்ற ஸ்ருதி

பெங்களூரு,

கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை மஞ்சுளா என்ற ஸ்ருதி. இவர் 'அம்ருததாரா' உள்ளிட்ட சில கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவரும் அம்பரீஷ் என்பவரும் 20 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஸ்ருதி தனது குடும்பத்துடன் பெங்களூரு அனுமந்தநகர் முனேஷ்வரா லே-அவுட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே, கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அம்பரீசுடன் வாழ பிடிக்காமல் ஸ்ருதி கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் வசித்து வரும் அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். 2 மகள்களையும் அவர் தன்னுடன் அழைத்து சென்றிருந்தார். பின்னர் கடந்த 3-ந்தேதி அம்பரீஷ், ஸ்ருதி இருவரையும் அவர்களது குடும்பத்தினர் சமாதானப்படுத்தினார்கள்.

அப்போது ஸ்ருதி மற்றும் மகள்களை நல்லபடியாக பார்த்து கொள்வதாக அம்பரீஷ் உறுதியாக கூறியுள்ளார். இதையடுத்து, மீண்டும் கணவர் வீட்டின் மகள்களுடன் சேர்ந்து ஸ்ருதி வாழ தொடங்கினார்.

இந்நிலையில், ஸ்ருதியின் நடத்தையில் அம்பரீஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் இடையே பணப்பிரச்சினையும் நிலவி வந்துள்ளது.

நடத்தையில் சந்தேகம், பணப்பிரச்சினை தொடர்பாக ஸ்ருதிக்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த அம்பரீஷ், ஸ்ருதியை அடித்து தாக்கியதுடன், கத்தியால் அவரை குத்திக் கொல்ல முயன்றார். இதில், அவருக்கு பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஸ்ருதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அம்பரீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story