கத்ரீனா கைப் - விக்கி கௌஷல் தம்பதிக்கு ஆண் குழந்தை

பாலிவுட் தம்பதி கத்ரீனா கைப் -விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்ரீனா கைப், கடந்த 2003ம் ஆண்டு வெளியான ‘பூம்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், அமீர்கான், ரன்பீர் கபூர் என பலருடன் நடித்துள்ளார். இவர் கடந்த 2021ம் ஆண்டு பாலிவுட் நடிகர் விக்கி கவுசலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த கத்ரீனா கைப், கடைசியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்த இப்படம் கடந்தாண்டு வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம், எங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த சகாப்தத்தை தொடங்க ஆயத்தமாகியுள்ளோம் என்று தாய்மைப்பேறு அடைந்த செய்தியை சமூக வலைதளங்களில் கத்ரீனா கைப் - விக்கி கவுசல் ஜோடி பகிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், இன்றுஆண் குழந்தை பிறந்துள்ளதாக கத்ரீனா கைப் -விக்கி கவுசல் ஜோடி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.






