“என்னை வாழ விடுங்கள்” - பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் வேதனை பதிவு


“என்னை வாழ விடுங்கள்”  - பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் வேதனை பதிவு
x

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகை தன் மீது சுமத்தப்படும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய பதிவினை பதிவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கு இருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மலையாள பிரபல நடிகர் திலீப்புக்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த எர்ணாகுளம் நீதிமன்றம் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்துள்ளது. மேலும் அவரது நண்பர் சரத் என்பவரை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விடுவித்துள்ளது. மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தன் மீது சுமத்தப்படும் வதந்திகளுக்கு பதிவொன்றை பாதிக்கப்பட்ட நடிகை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் “ எனக்கு எதிராக பாலியல் குற்றம் நடைபெற்ற பிறகு நான் உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவித்து, சட்ட நடவடிக்கை எடுக்க முனைந்தது மிகப்பெரிய தவறென நினைக்கிறேன். நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும். யாரிடமும் எதுவும் சொல்லியிருக்கக் கூடாது. அன்று நடந்ததெல்லாம் விதி என்று அமைதியாக இருந்திருக்க வேண்டும். பிறகு வீடியோ வெளியாகியதும், காவல்துறையில் புகார் அளிக்காத என்னிடம் கேள்வி கேட்பவர்களிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் தற்கொலை செய்திருக்க வேண்டும்.

வீடியோ எடுத்த, குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபர் சிறைக்கு செல்வதை பார்த்தேன். அவர் சிறைக்கு செல்லும்முன்பு அவர், நான்தான் உங்களை நிர்வாணமாக வீடியோ எடுத்தேன் என கூறியிருக்க வேண்டும். இதுமாதிரியான வக்கிரங்கள் நிரம்பிய தகவல்களைப் பேசுபவர்கள், அதை பரப்புகிற உங்களுக்கும் உங்கள் வீட்டார்களுக்கும் இதுபோல நடக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணாக அல்ல, ஒரு சாதாரண மனிதனாக சொல்கிறேன். என்னை வாழ விடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story