எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி" படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்

இதயக்கனி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரீலீஸ் செய்யப்பட உள்ளது.
சென்னை,
எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான படம் இதயக்கனி. ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் ராதாசலுஜா, இரா.சு.மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன், வெண்ணிற ஆடை நிர்மலா, பண்டரிபாய், ராஜசுலோசனா உள்பட பலர் நடித்திருந்தனர்.
இதயக்கனி படம் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திற்கு பெரிய உந்துசக்தியாக திகழ்ந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும், வசனங்களும் மக்கள் மனதில் எளிதாக சென்றடைந்தது. படத்தை ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இன்பமே உந்தன் பேர், நீங்க நல்லா இருக்கணும் போன்ற பாடல்கள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.
காலங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத காவியமாக மக்கள் மனதில் இருந்து வரும் இதயக்கனி படம் வெளியாகி 50 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதயக் கனி படம் மீண்டும் வருகிற 4-ந்தேதி தமிழகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. உலக எம்.ஜி.ஆர். பேரவை படத்தை வெளியிடுகிறது. 4.கே.டிஜிட்டல் முறையில் நவீன மயமாக்கப்பட்டு மீண்டும் வெளியாகும் இதயக்கனி படத்திற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.






