"ஒண்டி முனியும் நல்ல பாடனும்" படத்தின் டீசரை வெளியிட்ட பா.ரஞ்சித்


‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ படம் கொங்கு தமிழ் பேசும் மக்களின் யதார்த்த வாழ்வியலை பதிவு செய்திருக்கும் படைப்பு என்று இயக்குநர் சுகவனம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் புதுமுகங்கள் கதையின் நாயகர்களாக அறிமுகமாகும் 'ஒண்டி முனியும் நல்ல பாடனும்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் சுகவனம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒண்டி முனியும் நல்ல பாடனும்' எனும் திரைப்படத்தில் 'பரோட்டா' முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாதிபதி, சித்ரா, கௌசிகா, தமிழினியன் ,விகடன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விமல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கிறார். விவசாயியையும் , அவர் வணங்கும் காவல் தெய்வத்தையும் மையப்படுத்தி மண் சார்ந்த படைப்பாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை திருமலை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கருப்பசாமி தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கொங்கு தமிழ் பேசும் மக்களின் யதார்த்த வாழ்வியலை பதிவு செய்திருக்கும் படைப்பு இது. நிலத்தில் உழும் தொழிலாளர்களை - விவசாயிகளை- கொங்கு பகுதியில் நல்ல பாடன் என குறிப்பிடுவார்கள். இவர்களுக்கு ஒண்டி முனி எனும் சிறு தெய்வம் தான் காவல் தெய்வம். இதன் பின்னணியில் தான் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நிலமற்ற ஆனால் நிலத்தில் பணியாற்றும் ஏழை எளிய விவசாய மக்களின் வலி நிறைந்த வாழ்க்கையை.. அதன் இயல்பிலேயே விவரித்திருக்கிறோம். இது ரசிகர்களுக்கு நிச்சயமாக உணர்வு பூர்வமான படைப்பு அனுபவத்தை வழங்கும் '' என்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த தருணத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கொங்கு மண்ணின் மணத்தை சொல்வதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

1 More update

Next Story