அஜித் குமார் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்


அஜித் குமார் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 13 Nov 2025 3:13 PM IST (Updated: 5 Dec 2025 11:09 AM IST)
t-max-icont-min-icon

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை புத்துணர்ச்சி பானமான கேம்பா எனர்ஜி, அஜித்குமார் கார் பந்தய அணியின் எனர்ஜி பார்ட்னராக செயல்படவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி டிரிங்க் பிராண்டான கேம்பா, அஜித் குமார் கார் ரேஸிங் அணிக்கு அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படவுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஊக்குவிப்பது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும் என்றும், அதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உலகத்தரம் வாய்ந்த பொருட்களை மலிவான விலையில் வழங்குவதோடு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் திறமைசாலிகளை அவர்களின் லட்சியங்களை நோக்கிப் பயணிக்க வைப்பதும் எங்களுடைய முக்கிய நோக்கம் என்று ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தப் புதிய ஒப்பந்தம் இந்திய மோட்டார்ஸ்போர்ட் விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் மூலம் இந்த எனர்ஜி பிராண்ட் இளைஞர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story