ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் காலஅவகாசம் கேட்டதால் விசாரணை ஒத்திவைப்பு


ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் காலஅவகாசம் கேட்டதால் விசாரணை ஒத்திவைப்பு
x

ஆவணங்களை பரிசீலிக்க தர்ஷன் உள்ளிட்டோர் காலஅவகாசம் கேட்டதால் விசாரணை ஒத்திவைத்து சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

ரேணுகாசாமி கொலை வழக்கில் ஆவணங்களை பரிசீலிக்க நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் காலஅவகாசம் கேட்டதால் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து சிட்டிசிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழியான பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின் போது நீதிபதி முன்னிலையில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேரும் தங்களது மீதான குற்றச்சாட்டை நிராகரித்தனர்.

இதையடுத்து, ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணையை தொடங்குவது குறித்து நவம்பர் 10-ந் தேதி (அதாவது நேற்று) முடிவு செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை நடந்தது. அப்போது நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அந்த சமயத்தில் 17 குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன. அந்த ஆவணங்களை பரிசீலித்து தங்களது மனுதாரர்களுக்கு தெரிவிக்க 15 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும். அதன்பிறகு விசாரணை தொடங்கும் தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்று வாதிட்டார்கள். அதே நேரத்தில் குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த அரசு தரப்பு வக்கீல் முறையான நோட்டீஸ் வழங்கவில்லை என்றும் வக்கீல்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் 15 நாட்கள் காலஅவகாசம் வழங்க நீதிபதி மறுத்து விட்டார். 8 நாட்கள் காலஅவகாசம் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்கும்படியும் அரசு தரப்புக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

1 More update

Next Story