கலைமாமணி விருது புகைப்படங்களை வெளியிட்டு சாய் பல்லவி விளக்கம்


கலைமாமணி விருது புகைப்படங்களை வெளியிட்டு சாய் பல்லவி  விளக்கம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாய் பல்லவிக்கு கலைமாமணி விருதை சமீபத்தில் வழங்கினார்.

தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் கடந்த அக்டோபர் 11ம் தேதி நடைபெற்றது. 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதை 90 கலைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதில் நடிகர் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத், பின்னனி பாடகி ஸ்வேதா மோகன் உள்பட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இந்த விருது குறித்து சாய் பல்லவி தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “நான் வளரும்போது இருந்தே கலைமாமணி விருது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். சிறிய வயதில் இருந்தே இந்த விருதுக்காக ஏங்கியுள்ளேன். அந்த கவுரவத்தை நானும் பெற்றது மிகவும் நம்பமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழக அரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு மிக்க நன்றி. இந்தப் பதிவின் தாமததிற்கு காரணம், எனது அன்புக்குறியவர்களுடன் புகைப்படம் எடுக்க சற்று காலதாலதம் ஆனதுதான்” எனக் கூறியுள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்றதால் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையாக சாய் பல்லவி மாறியுள்ளார். தற்போது, இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story