வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை- நடிகை பாமா

சட்டபூர்வமாக வரதட்சணை தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன் பெயரால் பெண்கள் இன்னும் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள் என நடிகை பாமா கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
வரதட்சணை என்ற பெயரில் இளம்பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து அவர் அளித்த பேட்டியில், குடும்பம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தேவை. அப்படி இருக்கும் போது திருமணத்திற்கு எதற்காக வரதட்சணை கொடுக்க வேண்டும். எந்த பெண்ணும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சட்டபூர்வமாக வரதட்சணை தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன் பெயரால் பெண்கள் இன்னும் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள். பெண்கள் நன்றாக படித்து பணிக்கு செல்ல வேண்டும். படிக்க இயலாதவர்கள் உடல் உழைப்புக்கேற்ற பணியினை செய்ய வேண்டும். பெண்கள் விரும்பினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். பெண்களின் பணம் அவரது சொந்த நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
சமைத்து வீட்டை கவனித்துக் கொள்ள மட்டும் திருமணம் செய்ய கூடாது. கணவர் தோல்வியடையும் போது சொந்த துணையை தவிர வேறு யார் அவரை ஆதரிக்க வருவார்கள். அதற்காக நான் ஆண்களுக்கு எதிரானவர் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.






