“ஜனநாயகன்” படத்திற்கு ஆதரவு தெரிவித்த விஜய் வசந்த் எம்.பி


“ஜனநாயகன்” படத்திற்கு ஆதரவு தெரிவித்த விஜய் வசந்த் எம்.பி
x

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

சென்னை,

இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய நிலையில், சினிமாவை விட்டு முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படமே விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 'ஜனநாயகன்' படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை (9-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி, ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கிடையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், எம். பி ஜோதிமணி, நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவை அடக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழர்களின் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி எச்சரித்திருந்தார். ஆனால் இன்று பாஜக ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்றிதழை நிறுத்தி, அதன் வெளியீட்டை தடுத்து, தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதித்ததால், அந்த எச்சரிக்கை மீண்டும் உண்மையாகிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

1 More update

Next Story