'நீ கதவுகளை அடைக்கிறாய்...நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்' - மாரி செல்வராஜ்

'பைசன்’படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்தார்.
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பைசன் காளமாடன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்தார். அதனுடன், ஒரு பதிவையும் பகிர்ந்திருந்தார். அதில்,
'நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும். வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால் ….நீ கதவுகளை அடைக்கிறாய், நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன் - பைசன் (காளமாடன்)' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.






