பளு தூக்கும் பாவை அபிராமி


தினத்தந்தி 23 May 2022 5:30 AM GMT (Updated: 2022-05-23T11:01:03+05:30)

பளு தூக்குதல் பயிற்சியில் கடந்த ஒரு வருடமாகத் தான் ஈடுபட்டு வருகிறேன். என் உடல் எடையைக் குறைப்பதற்காக ஜிம்மில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு ஆண்கள் இந்தப் பயிற்சியை செய்வதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, நானும் பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினேன்.

துருக்கி நாட்டில் நடந்த, சர்வதேச அளவிலான பளுதூக்குதல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அபிராமி. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளுக்கான பயிற்சியில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகிறார். அவருடன் நடந்த உரையாடல் இங்கே…

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

எனது அம்மா அஜிதா, மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர். அப்பா சொந்தமாக தொழில் செய்து வருகிறார். தற்பொழுது சென்னையில் எம்.எஸ்சி., விஸ்காம் மற்றும் அனிமேஷன் படித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக பளு தூக்குதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும், விருதுகளையும் வாங்கியிருக்கிறேன். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன்.

சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து சொல்லுங்கள்?

துருக்கி நாட்டில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றேன். அது மிகக் கடினமான போட்டியாக இருந்தது. ரஷியா, சீனா, கஜகஸ்தான், சிங்கப்பூர் எனப் பல நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். அந்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றதை என் வாழ்வில் மறக்க முடியாது.

பளு தூக்குதலில் ஆர்வம் ஏற்பட்டது எவ்வாறு?

பளு தூக்குதல் பயிற்சியில் கடந்த ஒரு வருடமாகத் தான் ஈடுபட்டு வருகிறேன். என் உடல் எடையைக் குறைப்பதற்காக ஜிம்மில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு ஆண்கள் இந்தப் பயிற்சியை செய்வதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, நானும் பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினேன்.

முதலில், சென்னை மாவட்ட அளவில் நடந்த ஒரு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். அந்த வெற்றி என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. அதன் பின்பு, பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற தொடங்கியதும், இதில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. என் குடும்பத்தினரும் எனக்கு உதவியாக இருப்பதால் என்னால் தொடர்ந்து போட்டிகளில் கவனம் செலுத்த முடிகிறது.

பளு தூக்குதல் விளையாட்டு பொதுவாக ஆண்களுக்கானதாக பார்க்கப்படுகிறது. நீங்கள் எப்படி இதில் ஆர்வம் காட்டினீர்கள்?

ஆம். பலரும் இது பெண்ணுக்கான விளையாட்டு இல்லை. உனக்கு வருங்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். முதுகு வலி போன்ற பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால், என்னுடைய அம்மா எனக்கு பக்கபலமாக இருக்கிறார். எனது தோழி யோகனா தான், என்னை இந்த விளையாட்டில் பங்குபெற ஊக்குவித்தார்.

எனது அப்பா, சித்தப்பா, தாத்தா, ஜிம் மற்றும் பளு தூக்குதல் விளையாட்டு பயிற்றுனர்கள் என பலரும் எனக்கு உதவியாக இருப்பதால்தான், நான் இந்த அளவிற்கு செயல்பட முடிகிறது.

ஆணிற்கும், பெண்ணிற்கும் தனித்தனி விளையாட்டு இங்கு இல்லை என நம்புகிறேன். இந்த விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்த பிறகுதான் என்னுடைய உடல் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உணர்கிறேன். இது போன்ற விளையாட்டுக்களில் அனைத்து பெண்களும் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஜிம் மற்றும் விளையாட்டு பயிற்றுனர்கள் எந்த அளவில் உங்களுக்கு உதவுகிறார்கள்?

எனது பயிற்சியாளர்கள் ஹரி, அஜித், அருண், விஜய், ஜமீல் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர்கள். இவர்கள் தரும் பயிற்சி எனக்கு பெரிதும் உதவுகிறது.

தற்போது சர்வதேச போட்டியில் வெற்றி பெற்றவுடன், என்னை ஊக்குவிப்பதற்காக தங்களது ஜிம்மினை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து இருக்கிறார்கள். இது எனக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற நபர்களின் ஆசீர்வாதமும், உதவியும் தான் நான் மென்மேலும் போட்டிகளில் வெற்றி பெற உதவுகிறது.

ஒரு நாளில் எத்தனை மணி நேரம் பயிற்சி செய்கிறீர்கள்?

தற்பொழுது மூன்று ஜிம்கள் எனக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் பயிற்சி செய்தேன். ஆனால், தற்பொழுது 10 மணி நேரத்தை ஜிம்மிலே செலவழிக்கிறேன். தொடர்ந்து வரும் போட்டிகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என நினைக்கிேறன். எனவே அதற்கேற்ப என்னை தயார்படுத்திக் கொள்வதற்கு இந்தப் பயிற்சி தேவையானதாக இருக்கிறது.

சர்வதேச போட்டியில் வெற்றி பெற்றதும் தமிழக அரசு சார்பில் கிடைத்த பாராட்டு பற்றி கூறுங்கள்?

தமிழக முதல்வர் என்னை நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து இது போன்ற வெற்றிகள் பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்க்க அறிவுறுத்தினார். மேலும், தமிழக அரசு நான் போட்டியில் வெற்றி பெற்றதற்காக பரிசு தொகை வழங்க இருக்கிறது.

உங்கள் தேவதை யார்?

என் தாத்தா. அவர் இந்திய ராணுவத்தில் கேப்டனாக இருந்தார். நான் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றபோது மிகவும் சந்தோஷப்பட்டார். சர்வதேச அளவிலான எனது வெற்றியை பகிர்ந்து கொள்ள, அவர் இப்பொழுது இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவரின் ஆசீர்வாதம் எனக்கு எப்பொழுதும் இருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் வருங்காலத் திட்டம் என்ன?

காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக தங்க பதக்கம் வாங்குவது தான் எனது வருங்காலத் திட்டம். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.


Next Story