தள்ளாத வயதிலும் தளராமல் உழைக்கும் தனம் பாட்டி


தள்ளாத வயதிலும் தளராமல் உழைக்கும் தனம் பாட்டி
x
தினத்தந்தி 7 Aug 2022 1:30 AM GMT (Updated: 7 Aug 2022 1:30 AM GMT)

எங்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள். கணவர் 1991-ம் ஆண்டு காலமாகிவிட்டார். மகன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டுதலில் இயற்கை வழி வேளாண்மை நுட்பங்கள் கற்று விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

85 வயதிலும் 'தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துக்குப் பயனுள்ளதாக ஏதேனும் செய்ய வேண்டும்' என்ற நோக்கத்தில் களமிறங்கியிருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த தனம் பாட்டி.

குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அவர் தயாரிக்கும் பாரம்பரிய தின்பண்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரிடம் பேசினோம்...

"நான் பிறந்து, வளர்ந்தது உளுந்தூர்பேட்டை பகுதியிலுள்ள பழைய நன்னாரம் கிராமத்தில். எங்களுடையது மரபுவழி மருத்துவர் குடும்பம். அதனோடு வேளாண்மையிலும் ஈடுபட்டு வருகிறோம்.

புதுச்சேரியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் மண வாழ்க்கையில் இணைந்தேன். அதன் பின்பு பிரசவத்தில் உதவுதல், குழந்தைகளுக்கு தலைக்கு ஊற்றுதல், குழந்தை மருத்துவம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தேன்.

எங்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள். கணவர் 1991-ம் ஆண்டு காலமாகிவிட்டார். மகன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டுதலில் இயற்கை வழி வேளாண்மை நுட்பங்கள் கற்று விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தயாரிக்கும் எண்ணம் வந்தது எப்படி?

வீட்டில் இருந்தபடியே செயல்பட, வருமானம் ஈட்ட என்ன செய்யலாம் என்று யோசித்தபோது குழந்தைகளுக்கான பாரம்பரியமான தின்பண்டங்கள் தயாரிக்கலாம் என்று தோன்றியது. குடும்பத்தினரிடம் இதுபற்றி கூறி "எனக்கு ஆதரவு கொடுத்தால், நான் தின்பண்டங்கள் தயாரிக்கும் முறையை சொல்லித்தந்து வழி நடத்துகிறேன்" என்றேன். குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தால் அடுத்தடுத்த தலைமுறையும் ஆரோக்கியமாக வாழும் என்ற எண்ணத்தில், 'குழந்தைகளுக்கான தின்பண்டம் தயாரிப்பு' தொழிலுக்கு குடும்பத்தார் சம்மதித்தார்கள். என் அனுபவம், உழைப்பு மற்றும் குடும்பத்தாரின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த சிறுதொழிலை தொடங்கினேன்.

என்னென்ன தின்பண்டங்கள் தயாரிக்கிறீர்கள்?

நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, என்னுடைய அம்மா எங்களுக்குச் செய்து கொடுத்த இலுப்பைப் பூ உருண்டை செய்கிறோம். 'கமர்கட்' என்கிற தேங்காய்ப்பூ உருண்டை, இனிப்பு அத்திக்காய், இனிப்பு மாங்காய், இனிப்பு பப்பாளிக்காய், இனிப்பு வெண் பூசணிக்காய், இனிப்பு நெல்லிக்காய், இனிப்பு சிவப்பு அரிசி, உலர் மாம்பழம், உலர் பனம்பழம், உலர் வாழைப்பழம், உலர் பலாப்பழம், மாம்பழத் தேன்கூழ், பனம்பழ தேன்கூழ், கடலை மிட்டாய், கடலை உருண்டை, எள் உருண்டை, பொரிவிளங்காய் உருண்டை என பல பண்டங்களைத் தயாரிக்கிறோம். இவை மட்டுமில்லாமல் இயற்கை பற்பொடி, ஆவி பிடிக்கும் மூலிகைப் பை, ஆடாதொடை கசாயம், நிலவேம்புக் கசாயம், கொட்டாங்குச்சி கரித்தூள் உள்ளிட்டவற்றையும் தயாரிக்கிறோம்.

புளியங்கொட்டைகளை வறுத்து தோல் நீக்கித் தருகிறோம். அவற்றை ஊற வைத்து மென்று சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

'மறந்து போன, பழக்கத்திலிருந்து வழக்கொழிந்துபோன பாரம்பரியப் பண்டங்களை மீண்டும் சுவைக்க, ஆரோக்கிய மேம்பாட்டுப் பொருட்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறோம். அந்த விதத்தில் நாம் செய்வது சமூகத்திற்கான நல்ல விஷயம்' என்ற எண்ணமே என்னை மேலும் உற்சாகத்துடன் செயல்படத் தூண்டியது.

இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குவதன் ரகசியம்?

இந்த தலைமுறையும், இனிவரும் தலைமுறையும் எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என நான் நினைக்கிறேனோ, அவற்றைத்தான் நான் சிறுவயதில் இருந்து இன்று வரை சாப்பிட்டு வருகிறேன். அதுதான் என் உடலின் சுறுசுறுப்புக்கு காரணமாகும்.


Next Story