இந்தியாவின் வெதர் உமன்


இந்தியாவின் வெதர் உமன்
x
தினத்தந்தி 6 Nov 2022 7:00 AM IST (Updated: 6 Nov 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

1987-ம் ஆண்டு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனராக பொறுப்பு வகித்த போது, அறிவியலுக்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக ஐ.என்.எஸ்.ஏ கே.ஆர். ராமநாதன் பதக்கத்தை வென்றார். தனது ஓய்வுக்குப் பிறகு பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக நியமிக்கப்பட்டா

பெண்கள் கல்வி கற்பதற்கு பல்வேறு தடைகள் இருந்த அன்றைய காலகட்டத்தில், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே வான் அறிவியல் படித்து பல சாதனைகள் படைத்தவர் அன்னா மணி. தற்போது இந்திய அளவில் துல்லியமாக வானிலை நிலவரத்தை கணிக்க உதவியதில் அவரது பங்கு முக்கியமானது.

1918-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ம் நாள் கேரளா மாநிலம் திருவிதாங்கூரில் பிறந்தார் அன்னா மணி. அவருக்கு 8 வயதாக இருந்தபோதே பொது நூலகத்தில் உள்ள அனைத்து மலையாள புத்தகங்களையும்,

12 வயதை அடைந்தபோது அனைத்து ஆங்கிலப் புத்தகங்களையும் படித்திருக்கிறார். புத்தக வாசிப்பு அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது.

பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்பு 1939-ம் ஆண்டு சென்னை பச்சையப்பா கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் பி.எஸ்.சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார். ஐந்து ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார்.

1945-ம் ஆண்டு, இயற்பியலில் மேற்படிப்பைத் தொடர லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் சென்றார். 1948-ம் ஆண்டு படிப்பை முடித்து புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை பணியில் சேர்ந்தார்.

1953-ல் இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவராக அன்னா மணி நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வானிலை கருவிகளின் வடிவமைப்புகள் எளிமைப்படுத்தப்பட்டு, அதன் உற்பத்தி மேம்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்திய வானிலை ஆய்வுத் துறை துணை இயக்குநர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்ற அவர், ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பில் பல முக்கிய பதவிகளையும் வகித்திருக்கிறார்.

தற்போது நாம் பயன்படுத்தி வரும் வானிலை உபகரணங்கள் அனைத்திற்கும் அன்னா மணி தான் முன்னோடி. அதனால்தான் அவரை 'இந்தியாவின் வெதர் உமன்' என அழைக்கிறோம். அவரது ஆராய்ச்சி, இந்தியா துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை உருவாக்குவதை சாத்தியமாக்கியது. 1950-ல் இந்தியாவில் 'சோலார் ரேடியேஷன் கண்காணிப்பு' நிலையங்களின் நெட்ஒர்க்கை நிறுவிய பெருமை இவருக்கு உண்டு.

1987-ம் ஆண்டு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனராக பொறுப்பு வகித்த போது, அறிவியலுக்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக ஐ.என்.எஸ்.ஏ கே.ஆர். ராமநாதன் பதக்கத்தை வென்றார். தனது ஓய்வுக்குப் பிறகு பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக நியமிக்கப்பட்டார்.

சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலை மின்சக்தியாக மாற்றும் சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தையும் தொடங்கினார். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மாற்று ஆற்றல் மூலங்கள் குறித்து தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பல ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டார். நாட்டுக்காக அரும் பணிகளைச் செய்த அன்னா மணி, 2001-ம் ஆண்டு தனது 82-வது வயதில் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

1 More update

Next Story