ஆரோக்கிய சமையலில் அசத்தும் கிருத்திகா


ஆரோக்கிய சமையலில் அசத்தும் கிருத்திகா
x
தினத்தந்தி 1 Jan 2023 1:30 AM GMT (Updated: 1 Jan 2023 1:31 AM GMT)

புதுமையுடன், ஆரோக்கியமும் கலந்து கொடுத்தால், எப்போதும் உணவுத் தொழிலில் நிலையாக நிற்கலாம்.

"உணவுப் பொருட்களில் இருக்கும் சத்துக்கள் அழியாதவாறு சமைத்து சாப்பிட்டால், ஆரோக்கியம் நம் வசம் இருக்கும்" என்கிறார் கிருத்திகா ராதாகிருஷ்ணன்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஆரோக்கியம், சமையல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான நிகழ்ச்சிகளை பல மொழிகளில் வழங்குதல், உணவு பற்றிய புத்தகங்களை எழுதுதல், ஆரோக்கிய உணவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் யூடியூப் சேனல் நடத்துதல், பேக்கரி தொழில் என பல தளங்களில் இயங்கி வரும் இவர், திரைப்படத் தணிக்கைக்குழுவிலும் இருக்கிறார்.

சிறந்த ஹோம்பிரனர் விருது, ஐகானிக் பெண்கள் விருது, சிறந்த தொலைக்காட்சி இயக்குனருக்கான 'வாவ்' விருது, சக்தி விருது உள்ளிட்ட 12 விருதுகளைப் பெற்றிருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு.

"மதுரைதான் எனது சொந்த ஊர். என் தந்தை மருத்துவர் நாகராஜன் நரம்பியல் நிபுணர். தாய் மோகன ராணி இல்லத்தரசி. ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர்களின் ஒரே மகளான நான், ரசாயனத்துறை மற்றும் வணிக மேலாண்மை இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற் றிருக்கிறேன். எனது கணவர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கிறார். எங்கள் ஒரே மகன் அரவிந்த் மருத்துவ மேற்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார்".

ஆரோக்கிய சமையலில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

எனது குடும்பத்தினர் உணவு விரும்பிகள். அதனால் நானும் சிறுவயதில் இருந்தே உணவை நன்றாக சுவைத்து சாப்பிடுவேன். நாங்கள் சாப்பிடும் உணவில் இருக்கும் சத்துக்கள், அவற்றின் முக்கியத்துவம், ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அவற்றில் இருக்கும் சத்துக்கள் அழியாமல் சமைப்பது எப்படி? என என்னுடைய பெற்றோர் சிறுவயதில் இருந்தே சொல்லிக் கொடுத்து சாப்பிட வைத்தார்கள். அதுமட்டுமில்லாமல், வீட்டில் தயாரிக்கும் உணவு, வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது சாப்பிடும் உணவு, கடைகளில் வாங்கும் உணவு என எந்த வகை உணவாக இருந்தாலும், அதன் சுவை மற்றும் செய்முறை குறித்து நாங்கள் எப்போதும் கலந்துரையாடுவோம். இதுவே ஆரோக்கிய சமையலில் ஆர்வத்தை உண்டாக்கியது.

சமையல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவது குறித்து சொல்லுங்கள்?

2000-வது ஆண்டு தனியார் தொலைக்காட்சியில், பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றின் சமையல் பகுதியில் பங்கேற்றேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு பல தனியார் தொலைக்காட்சிகளில் எனக்கு வாய்ப்புகள் வந்தன. முன்னணி தனியார் தொலைக்காட்சியில் 'மைக்ரோவேவ் சமையல்' நிகழ்ச்சியை தொடராக ஐந்து ஆண்டுகள் நடத்தினேன். அதற்கு அடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் உள்ளூர், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் பிரபலமாக இருக்கும் மூன்று வகையான சமையலை செய்து காண்பிக்கும் தொடர் நிகழ்ச்சியை வழங்கினேன். பின்னர் பல தொலைக்காட்சிகளில் ஆரோக்கிய சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளையும் தயாரித்து அளித்தேன்.

நீங்கள் எழுதியுள்ள சமையல் தொடர்பான புத்தகங்கள் பற்றி கூறுங்கள்?

இதுவரை 9 புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறேன். என்னுடைய முதல் புத்தகம் 'இன் டூ தி வேல்டு ஆப் எக்ஸ்பர்ட்' 2000-வது ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு மைக்ரோவேவ் சமையல் குறிப்புகள், ஸ்நாக்ஸ், டெசர்ட் பற்றிய சமையல் புத்தகங்களையும் எழுதியிருக்கிறேன்.

பேக்கரி தொழிலில் நுழைந்தது எப்படி?

விதவிதமாக சாப்பிடுவது மற்றும் சாப்பாட்டைப் பற்றி பேசுவதே, சமைக்கும் ஆர்வத்தையும் தூண்டியது. அதனால் பலவிதமான உணவுகள் தயாரிக்கக் கற்றுக்கொண்டேன். அவ்வாறு ஆரம்பத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் 'கேக்' தயாரித்து கொடுத்தேன். பின்பு வெளி நிகழ்ச்சிகளுக்கு தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தேன்.

கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து கடைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது வீட்டிலேயே ரொட்டி தயார் செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, மளிகைக் கடைகளில் ரொட்டி மற்றும் சிறிய கேக் வகைகளை விற்பனைக்கு வைத்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை அப்படியே தொடர்ந்தபோது தொழில் வளர்ச்சி அடைந்தது.

குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் கொண்ட கேக் செய்வது சாத்தியமா?

கொழுப்பும், கலோரிகளும் குறைவாக இருக்கும் ஆரோக்கியமான கேக்குகளை தயாரிக்க முடியும். அதிக இனிப்பில்லாமல் சுகர் பிரீ கேக்குகள், வீகன் கேக்குகள், குளூட்டன் பிரீ கேக்குகள், கீட்டோ கேக் வகைகள் என ஒவ்வொருவரின் தேவைக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற தனித்துவமான கேக்குகளையும் தயாரிக்கிறேன். கவனத்தை எளிதில் ஈர்க்கும் வகையில் வண்ணமயமான, பொம்மைகள் வடிவ கேக் செய்வதுடன், அப்போதைய டிரெண்டுக்கு ஏற்றார்போலவும் கேக்குகளை வடிவமைக்கிறேன்.

உணவுத் தொழிலில் உள்ள போட்டியை எப்படி கையாள்கிறீர்கள்?

உணவுத் தொழில் பரந்த கடல் போன்றது. இந்தத் துறையைப் பொறுத்தவரை 'இன்ஸ்பிரேஷன்' என்பதையும் தாண்டி, அவரவரின் தனித்துவமான சிந்தனை முக்கியமானது. ஒவ்வொரு நாளும் நம்முடைய விருப்பம் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார்போல தினமும் புதிது புதிதாக முயற்சி செய்ய வேண்டும். புதுமையுடன், ஆரோக்கியமும் கலந்து கொடுத்தால், எப்போதும் உணவுத் தொழிலில் நிலையாக நிற்கலாம். இதைத்தான் நான் பின்பற்றுகிறேன்.

ஆரோக்கியமான சமையல் செய்வதற்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

காய்கறிகளின் இயற்கையான நிறம் மாறாமல் சமைப்பதே ஆரோக்கியமான சமையலுக்கான அடிப்படை. சிலர் காய்கறிகளை நறுக்கிவிட்டு பின்னர் தண்ணீரில் கழுவி சமைப்பார்கள். இவ்வாறு செய்யும்போது, அவற்றில் உள்ள சத்துக்கள் முற்றிலுமாக போய்விடும். எப்போதும் கழுவிய பின்னரே காய்கறிகளை நறுக்க வேண்டும்.

வேகவைக்கும்போதும் சரியான சமையல் முறையை பின்பற்ற வேண்டும். நேரமில்லாத காரணத்தால் அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து குக்கரில் வேகவைக்கக் கூடாது.

காய்கறிகளின் வடிவம், நிறம் தெரியாமல், காய்கறி போட்டதற்கான அடையாளமே தெரியாத வகையில் சமைக்கக்கூடாது. இது உணவில் உள்ள ஊட்டச்சத்து இழப்புக்கு வழிவகுக்கும்.

ஆட்சிப் பணி அதிகாரியின் மனைவியாக, சமூக சேவையில் உங்கள் பங்களிப்பு என்ன?

எனது கணவர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, அந்தந்த மாவட்டங்களில் கில்டர்ஸ் சர்வீஸ் பிரெசிடெண்ட்டாக இருந்து மக்களுக்குத் தேவையான சேவைகளை செய்து வந்தேன். உதாரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடக்கும்போது, பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்லும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடைகளை அமைக்க பெண்களுக்கு அனுமதி பெற்றுத் தந்தேன். தஞ்சை மாவட்டத்தில் தனியார் பள்ளிக் குழந்தைகள் தீ விபத்தின் போதும், நாகை மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டபோதும் பல சேவைகளை செய்தேன்.


Next Story