ஸ்கேட்டிங் மூலம் பதக்கங்களைக் குவிக்கும் மிர்துபாஷினி


தினத்தந்தி 7 Aug 2022 1:30 AM GMT (Updated: 7 Aug 2022 1:30 AM GMT)

ஆரம்ப காலங்களில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்கு மைதான வசதி இல்லாததால், சாலைகளில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும், நான்கு மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்வேன். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்தான் பயிற்சி எடுப்பேன். போட்டிகள் அறிவிக்கப்பட்ட மாதங்களில் கூடுதலான நேரங்கள் பயிற்சி செய்வேன்.

ரண்டு கால்களிலும் உருளும் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு அல்லது சக்கரங்கள் பொருத்திய சிறிய நீள் வடிவ மரப்பலகையின் மீது நின்று கொண்டு லாவகமாக சறுக்கிச் செல்லும் விளையாட்டு ஸ்கேட்டிங். சிறுவர், சிறுமியர் பலர் சாலை ஓரங்களிலும், பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களிலும் உற்சாகத்தோடு ஸ்கேட்டிங் செய்வதை பார்த்திருப்பீர்கள். அவ்வாறே சிறு வயதில் இருந்து ஆர்வத்துடன் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு, சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, பல பதக்கங்களை வென்று வருகிறார் திருச்சியைச் சேர்ந்த மிர்துபாஷினி. அவரது பேட்டி.

ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபாடு வந்தது எப்படி?

சிறு வயதில், மற்ற சிறுவர், சிறுமிகள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு விளையாடுவதைப் பார்த்து எனக்கும் ஸ்கேட்டிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதைப் புரிந்து கொண்ட எனது பெற்றோர், 4 வயதில் என்னை ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பில் சேர்த்தனர்.

ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டதைப் பற்றி கூறுங்கள்?

ஆரம்ப காலங்களில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்கு மைதான வசதி இல்லாததால், சாலைகளில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும், நான்கு மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்வேன். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்தான் பயிற்சி எடுப்பேன். போட்டிகள் அறிவிக்கப்பட்ட மாதங்களில் கூடுதலான நேரங்கள் பயிற்சி செய்வேன்.

ஸ்கேட்டிங் விளையாட்டில் நீங்கள் பெற்ற பதக்கங்கள் குறித்து சொல்லுங்கள்?

நான்காம் வகுப்பு படித்தபோது, ஸ்கேட்டிங்கில் முதல் முறையாக தேசிய அளவிலானப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றேன். அதில் இருந்து பத்தாம் வகுப்பு வரை, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறேன். இவ்வாறு மாவட்ட, தேசிய, சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 300-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளேன்.

2004-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மாவட்ட அளவில் சாம்பியன் பட்டமும், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தேசிய அளவில் பதக்கங்களும் பெற்ற நான், 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் 'உலக ரோலர் கேம்' போட்டியில் கலந்து கொண்டேன்.

'தொடர் முயற்சிக்கு எப்போதுமே வெற்றி உண்டு' என்று என்னுடைய பயிற்சியாளர் அடிக்கடி கூறுவார். அதைப் பின்பற்றியதற்கு கிடைத்த பலனாக, முதன் முதலாக சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, இந்தியா சார்பில் உலக கோப்பைக் கான போட்டியில் கலந்து கொண்டேன். அந்தப் போட்டியில் நமது அணிக்கு நான்காவது இடம் கிடைத்தது.

ஸ்கேட்டிங் தவிர வேறு விளையாட்டுகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?

ஸ்கேட்டிங் மட்டுமின்றி நீச்சல், சிலம்பம், குதிரை ஏற்றம் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டேன். மாநில அளவில் ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிருக்கிறேன்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் நீங்கள் கல்வியில் எத்தகைய மாணவி?

விளையாட்டைப் போலவே கல்வியிலும் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன். 'விளையாட்டில் ஈடுபடுபவர்கள், கல்வியில் கவனம் செலுத்த மாட்டார்கள்' என்ற தவறான கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால், விளையாட்டில் ஆர்வத்தோடு பங்கேற்பவர்கள் அனைவரும், அதிக உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் செயல்படுவார்கள். உடற்பயிற்சிகள் செய்வார்கள். இதன் காரணமாக, மூளை சுறுசுறுப்போடு செயல்படும். மனதை ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கும். அதனால் கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள் என்பதே உண்மை.

விளையாட்டின் மூலம் நீங்கள் பெற்ற பலன்கள் என்ன?

வெற்றி-தோல்வி என்பதைத் தாண்டி, வாழ்வில் தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை விளையாட்டு எப்போதும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். அதற்கான வாய்ப்புகளையும் வழங்கிக்கொண்டே இருக்கும். அவ்வாறுதான், நான் கல்லூரியில் பொறியியல் துறையைத் தேர்வு செய்தபோது, விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீட்டில் எளிதாக வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய இரு சகோதரர்களும் விளையாட்டு வீரர்கள்தான். அவர்களும் தற்போது விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீட்டில், மருத்துவக்கல்வி படித்து வருகிறார்கள்.

இதுபற்றிய விழிப்புணர்வை, பல மாணவர்களுக்கும் ஏற்படுத்தி வருகிறேன். அதன் அடிப்படையில் பல மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

போட்டிகளில் கலந்து கொள்வது, நம் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு உதவும். அதே சமயம், அதன் மூலம் கிடைக்கும் சான்றிதழ்கள் கல்வி, வேலை ஆகிய வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவைப்படும். பல மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

நான் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, விளையாட்டு துறை இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை அறிந்து தொடர்ந்து முயற்சித்து வந்தேன். அதன் தொடர்ச்சியாக, தற்போது அரசு வேலை கிடைத்துள்ளது.

பெற்றோரின் ஆதரவு எவ்வாறு இருந்தது?

ஸ்கேட்டிங் பயிற்சிக்காக அதிக பொருட்செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், என்னுடைய திறமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக, எனக்குத் தேவையான அனைத்தையும் பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர். போட்டிகள் எங்கு நடைபெற்றாலும், அதில் கலந்து கொள்வதற்கு என்னை அழைத்துச் சென்றனர். 'கல்வியையும், தனித்திறனையும் சமமாகப் பார்க்க வேண்டும். திறமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என்று சொல்லியே என்னை வளர்த்தனர். அவர்கள் அளித்த ஊக்கமே என்னுடைய வெற்றிக்குக் காரணம்.

உங்கள் லட்சியம் என்ன?

எல்லோருக்கும் வாய்ப்புகள் சமமாகத்தான் கிடைக்கின்றன. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். ஆனால் அந்தப் பாதையில் நம்மை அழைத்துச் செல்லும் வழிகாட்டிகள் தான் இங்கு குறைவு. எனவே வருங்காலத்தில் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கும் வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன்.

இதுவரை ஒலிம்பிக் போட்டியில் ரோலர் ஸ்கேட்டிங் இடம் பெறவில்லை. 2028-ம் ஆண்டு நடைபெறும் போட்டியில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதில் கலந்துகொண்டு, இந்தியாவிற்காக முதல் தங்கத்தை வென்று கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். பல உலக சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காகவே பயிற்சி செய்து வருகிறேன்" என்றார் மிர்துபாஷினி.


Next Story