நீந்துவதால் முன்னேறுகிறேன் - சக்தி ஷிவானி


நீந்துவதால் முன்னேறுகிறேன் - சக்தி ஷிவானி
x
தினத்தந்தி 31 July 2022 1:30 AM GMT (Updated: 31 July 2022 1:30 AM GMT)

பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றிருக்கிறேன். அவற்றில் குறிப்பிடும்படியாக, தமிழ்நாடு மாநில நீச்சல் கழகம் சார்பில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு முதலிடமும், 2019-ம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற 32-வது தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்று 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், சான்றிதழும் பெற்றேன்.

ல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த உடற்பயிற்சி நீச்சல். சிறு வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஆர்வம் கொண்டு, தொடர்ந்து பயிற்சி செய்து, போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், பரிசு

களையும் குவித்து வருகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி சக்தி ஷிவானி. அவரது பேட்டி.

"எனது அப்பா குமரகுருபரன், அம்மா விஜயலட்சுமி. அப்பா கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். அதனால் என்னையும் ஏதாவது விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்பினார். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது, என்னை கிரிக்கெட் விளையாட அழைத்துச் செல்வார். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை.

ஒரு முறை கோடை விடுமுறையின்போது, நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றார். நீச்சல் பயிற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்று முதல், இன்று வரை தினமும் காலையும், மாலையும் நீச்சல் பயிற்சி செய்கிறேன். அதிக நேரம் நீந்துவதால் உடல் உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைக்கிறது. முழு மனதுடன் பயிற்சி செய்வதால், நீச்சலில் என்னுடைய வேகம் அதிகரித்து வருகிறது என்று பயிற்சியாளர் சோலைமணி அடிக்கடி சொல்லி பாராட்டுவார்."

நீங்கள் கலந்து கொண்ட போட்டிகள் மற்றும் பெற்ற பரிசுகள் பற்றி சொல்லுங்கள்?

பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றிருக்கிறேன். அவற்றில் குறிப்பிடும்படியாக, தமிழ்நாடு மாநில நீச்சல் கழகம் சார்பில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு முதலிடமும், 2019-ம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற 32-வது தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்று 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், சான்றிதழும் பெற்றேன்.

2020-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் இரண்டாவது இடமும், 2022-ம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் முதல் பரிசும் பெற்றேன்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமான போட்டிகள் நடத்தப்படவில்லை. இப்போது மீண்டும் போட்டிகள் நடக்கத் தொடங்கியுள்ளன. போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து சாதிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

நீச்சல் பயிற்சியால் உங்கள் கல்வி கற்கும் திறன் மேம்பட்டுள்ளதா?

உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தி, நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது மட்டுமே வெற்றி சாத்தியமாகிறது. இந்த அனுபவம் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது முழுமனதுடன் கவனிப்பதற்கும், குறிப்புகள் எடுப்பதற்கும் உதவுகிறது. நீச்சல் பயிற்சிக்கும், பள்ளி பாடத்துக்கும் போதுமான நேரம் ஒதுக்க வேண்டும் என்பதால், இதன்மூலம் நேர மேலாண்மையைக் கற்றுக்கொள்கிறேன். மொத்தத்தில் நீச்சல் பயிற்சி எனது முன்னேற்றத்திற்கு உதவுகிறது.


Next Story