நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் சபரி கிரிஜா


தினத்தந்தி 26 Jun 2022 1:30 AM GMT (Updated: 2022-06-26T07:00:37+05:30)

முதலில் பெயிண்டிங் தான் தொடங்கினேன். பெயிண்டிங், களிமண் கொண்டு கலைப்பொருட்கள் செய்வது என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கலையால் ஈர்க்கப்பட்டு, அதனை சுயக்கற்றல் மூலம் பயிற்சி செய்து கற்றுக் கொள்வேன். அவ்வாறு, யூடியூப் வீடியோ ஒன்றில் ‘ரெசின்’ கலையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதன் அழகியலால் ஈர்க்கப்பட்டு, தேவையானப் பொருட்களை வாங்கி கற்கத் தொடங்கினேன்.

வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழும் சம்பவங்களையும், ஒரு முறை மட்டும் கிடைக்கும் பொருட்களையும் அப்படியே கடந்துவிட முடிவதில்லை. அவற்றைக் காலத்திற்கும் போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷமாகவே மனம் நினைக்கும்.

அவ்வாறு, பலரும் திருமண பந்தத்தில் இணைந்ததற்கான சாட்சியாக அணிவிக்கப்படும் தாலிக் கயிறு, அன்றைய தினத்தில் கழுத்தை அலங்கரித்த கல்யாண மாலை ஆகியவற்றை பாதுகாத்து வைக்க எண்ணுவார்கள். அவர்களின் எண்ணத்துக்கு, வண்ணங்களோடு உயிர் கொடுக்கும் வகையில் 'ரெசின்' எனப்படும் ரசாயனம் கொண்டு அழகிய அலங்காரப் பொருட்களாக மாற்றி வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சபரி கிரிஜா. அவரது பேட்டி.

"எனது பூர்வீகம் திருநெல்வேலி. படித்ததெல்லாம் அங்கு தான். திருமணத்திற்குப் பிறகு கோயம்புத்தூர் வாசியாகி விட்டேன். பட்டப்படிப்பு படித்து முடித்த பின்பு, ஏதோவொரு நிறுவனத்தின் ஊழியராகப் பணிபுரிய விருப்பமில்லை. அனுபவ சேகரிப்பிற்காக மட்டும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிதி நிர்வாகியாகப் பணிபுரிந்தேன். அதே நேரம், கைவினைக்கலை மீது அதிக நாட்டமிருந்ததால் சிறுசிறு வீட்டு அலங்காரப் பொருட்களை ஓய்வு நேரங்களில் செய்து வந்தேன்.

திருமணத்திற்குப் பிறகு 6 மாத காலம் நானும், என் கணவரும் அமெரிக்காவில் வசித்தோம். அந்த சமயத்தில், அங்கிருந்த கலைப் பள்ளி ஒன்றில் கலைப் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிந்தேன். அதன் பிறகு, கோயம்புத்தூருக்கே இடம்பெயர்ந்து விட்டோம்."

ரெசின் கலைக்கு எப்படி அறிமுகமானீர்கள்?

முதலில் பெயிண்டிங் தான் தொடங்கினேன். பெயிண்டிங், களிமண் கொண்டு கலைப்பொருட்கள் செய்வது என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கலையால் ஈர்க்கப்பட்டு, அதனை சுயக்கற்றல் மூலம் பயிற்சி செய்து கற்றுக் கொள்வேன். அவ்வாறு, யூடியூப் வீடியோ ஒன்றில் 'ரெசின்' கலையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதன் அழகியலால் ஈர்க்கப்பட்டு, தேவையானப் பொருட்களை வாங்கி கற்கத் தொடங்கினேன். ரசாயனப் பொருள் என்பதால் அதன் தன்மை என்ன, எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றறிந்து கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. பின்பு கீ செயின், எழுத்துகள் என சிறு சிறு கலைப்பொருட்களை ரெசின் பயன்படுத்தி செய்ய ஆரம்பித்தேன்.

ரெசின் பயன்படுத்தி நினைவுப் பொருட்களைப் பாதுகாக்கும் எண்ணம் எப்படி வந்தது?

'எபோக்ஸி ரெசின்' என்ற ரசாயனம் கொண்டு ஒரு பொருளைக் கெடாமல் பாதுகாத்து வைக்க முடியும். அப்படி இருக்கையில், தோழி ஒருவர் அவரது திருமண மாலையில் இருந்த காய்ந்த பூக்களைக் காலத்திற்கும் பாதுகாக்கும் வகையில் கலைப்பொருளாக மாற்றித் தரச் சொன்னார். அவருக்காக காய்ந்த பூக்களால் அலங்கரித்த பெயர்ப் பலகை ஒன்றைச் செய்து கொடுத்தேன்.

அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, பலரும் பாராட்டினர். ஒவ்வொருவரும் அவர்கள் ஞாபகங்களின் வடிவங்களாக மாற்ற நினைக்கும் பொருட்களைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்து கொடுக்குமாறு கேட்டனர். இப்போது, அதுவே தொழிலாகி மாதத்திற்கு 30 ஆர்டர்கள் வரை பெற்று வருகிறேன்.

எத்தகைய பொருட்களையெல்லாம் ஞாபகச்சின்னங்களாக மாற்றுகிறீர்கள்?

வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அன்பைப் பரிமாறிக் கொண்ட நினைவுகளையும், இழப்புகளின் ஞாபகங்களையும் பொக்கிஷங்களாக்கி பத்திரப்படுத்த நினைக்கிறார்கள். அந்த வகையில் கல்யாண மாலை, கல்யாணப் பத்திரிகை, கல்யாண அட்சதை, தாலிக்கயிறு, குழந்தைகளின் முடி, தொப்புள் கொடி போன்றவற்றை அனுப்பி வைத்தனர். ஒருவர் ஒரே ஒரு 'இமை முடி' அனுப்பி அதை தாலிக்கயிற்றில் கோர்த்துக் கொள்ளும் தாலி உருக்களாக செய்துதரச் சொன்னார்.

ஒரு பெண் தன் அம்மாவைப் புதைத்த கல்லறையில் இருந்த மண்ணை, வெகு நாட்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகவும், அதில் ஒரு பதக்கம் செய்து தருமாறும் கூறினார். சிலர் இன்னும் வித்தியாசமாக, பயன்படுத்திய சோப்பு, ஷாம்பு பாக்கெட், சாக்லெட் கவர், குழந்தைகளுக்கு விழுந்த முதல் பற்கள் ஆகியவற்றை அனுப்பியிருந்தனர்.

வாடிக்கையாளர்கள் அனுப்பும் பொருட்களுக்கு ஏற்றவாறு செயின், மோதிரம், டாலர் போன்ற நகைகளாகவும், பெயர் பலகை, சுவர் அலங்காரம், கடிகாரம், கண்ணாடி போன்ற அலங்காரப் பொருட்களாகவும் மாற்றியளிப்பேன்.

ரெசின் கலைப்பொருட்களை எவ்வாறு உருவாக்குறீர்கள்?

கல்யாண மாலை, பூக்கள் போன்றவற்றை அனுப்பும் போது, பாலீத்தின் பைகளில் போட்டு அனுப்பக்கூடாது. பாலித்தீன் பையில் அவை, ஈரப்பதமாகி விடுகின்றன மற்றும் பூஞ்சை தாக்குதலுக்கும் உள்ளாகின்றன. என் கைக்கு பொருள் வந்த பின்பு, அதன் தன்மையை அறிந்த பின்னரே, வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரி பொருட்களைச் செய்யலாம் என மாதிரி வடிவத்தை வரைந்து காட்டுவேன்.

சோப்பு, ஷாம்பு, சாக்லெட் என வாடிக்கையாளர்கள் வித்தியாசமான பொருட்களை அனுப்புவதால், அதில் செய்ய முடியுமா என்று முதலில் நான் செய்து பார்த்துவிடுவேன். காய்ந்த தன்மையிலே பூக்களை அனுப்பி வைத்தால் நேரடியாக ரெசின் கலவையை ஊற்றிப் பொருட்களை செய்துவிடுவேன்.

இல்லையென்றால், பூக்களை முதலில் சிலிக்கா ஜெல் பயன்படுத்தி காய வைக்க வேண்டும். பொருளின் தடிமனுக்கு ஏற்றாற்போன்று ஒவ்வொரு அடுக்காக தான் ரெசின் கலவையை ஊற்றி காய வைக்க வேண்டும். அறை வெப்பநிலையில் ரெசின் காய்வதற்கு 68 மணி நேரமாகும். இவ்வாறு, ஒவ்வொரு படிநிலையாக முடித்து ஒரு பொருளை செய்ய 10 நாட்களாகும்.

இந்தத் தொழிலில் நீங்கள் பெருமையாக, சவாலாக உணர்வது என்ன?

'ரெசின் ஆர்ட்' மூலம், நேசிப்பவர்களை இழந்த துயரத்தில் இருப்பவர்களின் வலியைக் குறைக்க என்னால் உதவ முடிகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், இறந்தவர்களின் சாம்பல் போன்ற உணர்வுப் பூர்வமான பொருட்களைக் கையாள்வதால், மிகுந்த பதற்றத்துடனும், கவனமாகவும் செய்வேன். ஒரு மாதத்திற்கு 20 லிட்டர் ரெசினை பயன்படுத்தி வருகிறேன். ரசாயனப் பொருள் என்பதால், முகக்கவசம் அணிந்து கொண்டு தான் தயாரிப்புப் பணியில் ஈடுபடுவேன். சில நேரங்களில் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ரெசின் அறை வெப்பநிலையில் உலரக்கூடியது.

அதனால், மின்விசிறியின்றி, கதவு, ஜன்னலை எல்லாம் அடைத்துக்கொண்டு, தூசு விழுந்துவிடாமல், குமிழிகள் ஏற்பட்டு விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே நள்ளிரவிலும் எழுந்து போய் பரிசோதித்துக் கொள்வேன். எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும், அந்தப்பொருள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்த பின் அவர்கள் அனுப்பும் கருத்துகளைப் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.


Next Story