முதுமையிலும் திறமையை வெளிப்படுத்தும் சுலோச்சனா


முதுமையிலும் திறமையை வெளிப்படுத்தும் சுலோச்சனா
x

பாரம்பரிய உணவுகள் மற்றும் அவற்றின் செய்முறைகளை என் பாட்டி மற்றும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர் பணியாற்றிய காலத்தில், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் பலர் எங்கள் வீட்டில் வந்து சாப்பிடுவார்கள். அப்போது அவர்கள் என் கைப்பக்குவதை பாராட்டிச் செல்வார்கள்.

'முதுமை' என்ற ஒரு வார்த்தையை காரணமாகக் கொண்டு தளர்ந்து விடாமல், பம்பரமாகச் சுழன்று வருகிறார் சுலோச்சனா. மதுரையைச் சேர்ந்த இவர் தனது 68 வயதில் தொழில் முனைவோராக, தனக்கென ஒரு அடையாளத்தை தொடங்கினார். தற்போது 74 வயதான இவரது தயாரிப்புகளான அறுபதுக்கும் மேற்பட்ட பொடி வகைகள், ரெடி மிக்ஸ்கள் மற்றும் உணவுகளுக்கு இந்தியா தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர். அவரது பேட்டி இதோ...

அந்தக் காலத்து பெண்கள் எல்லாரையும் போல நானும், கணவர், குடும்பம், குழந்தைகள் என்று வாழ்ந்து வந்தேன். குடும்பத்தை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. அதைத் தாண்டி வேறு எதையும் நான் யோசித்தது இல்லை.

பாரம்பரிய உணவுகள் மற்றும் அவற்றின் செய்முறைகளை என் பாட்டி மற்றும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர் பணியாற்றிய காலத்தில், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் பலர் எங்கள் வீட்டில் வந்து சாப்பிடுவார்கள். அப்போது அவர்கள் என் கைப்பக்குவதை பாராட்டிச் செல்வார்கள்.

பிள்ளைகள் வளர்ந்து, திருமணமாகி அவரவர் குடும்பத்தோடு வாழ ஆரம்பித்ததும் எனக்கு நேரம் அதிகமாக கிடைத்தது. வயதின் காரணமாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வர ஆரம்பித்தன. வீட்டில் சும்மா இருந்தால் கவலைகள் அதிகரிக்கும் என்பதால், பொடிகள் தயாரித்து விற்பனை செய்யும் யோசனையை என் இளைய மகள் கொடுத்தாள்.

ஆரம்பத்தில் 10 முதல் 12 பொடி வகைகளோடு ஆரம்பித்தேன். இப்போது அங்காயப்பொடி, எள்ளுப் பொடி, கொள்ளுப்பொடி, பொடி தோசைப் பொடி என 60 வகைகளுக்கும் மேல் தயாரிக்கிறேன்.

இந்த வயதிலும் இவ்வளவு உத்வேகமாக இருப்பது எப்படி?

11-ம் வகுப்பு படிப்பதற்கு முன்பாகவே, நான் தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி மொழி புலமை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றேன். எனக்கு வணிகவரித் துறையில் வேலையும் கிடைத்தது. குடும்பத்தைகவனிக்க வேண்டும் என்பதால் வேலையில் சேரவில்லை.

இத்தனை திறமைகள் இருந்தும் அவற்றை வீணாக்கியதை எண்ணி வருத்தப்பட்டேன். சமையல் கலையில் கைதேர்ந்ததால் அதைப் பயன்படுத்தி எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த நினைத்தேன். அதுதான் என்னை உத்வேகத்தோடு செயல்பட வைக்கிறது.

உங்கள் தயாரிப்புகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

பொடி வகைகளை ரசாயனகள், செயற்கை நிறமூட்டிகள் எதுவும் சேர்க்காமல் பாரம்பரிய முறைப்படி தயார் செய்கிறேன். ஆரம்பத்தில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தயார் செய்து கொடுத்தேன். சுவையும், மணமும், தயாரிப்பு முறையும் பிடித்ததால் அவர்களே பலருக்கு எனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார்கள். இப்போது சென்னையை மையமாகக் கொண்டு, அமெரிக்கா, கனடா, பிரான்சு, துபாய் என பல நாட்டில் வசிப்பவர்களுக்கும் விற்பனை செய்கிறேன்.

எனது தயாரிப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முயற்சித்து வருகிறேன். முன்னேறுவதற்காக உழைப்பதற்கு என் மனதும், உடலும் தயாராக உள்ளது. இவ்வாறு நம்பிக்கையோடு முடித்தார் சுலோச்சனா பாட்டி.


Next Story