வட்டத்தை தாண்டி வானத்தில் பறப்போம்- வைஷ்ணவி


தினத்தந்தி 19 Jun 2022 1:30 AM GMT (Updated: 19 Jun 2022 1:30 AM GMT)

நேரமில்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்ற காரணத்தால் தான் ஈவென்ட் பிளானிங் நிறுவனங்களை அணுகுகிறோம். அதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைவாக இருந்தால் நடுத்தர வர்க்கம் மற்றும் எளிய மக்களும் பயன்பெறுவார்கள் என்று நினைத்தேன்.

"எல்லா பெண்களுக்கும் தனித்திறமை உள்ளது. அதைக் கண்டறிந்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களின் உதவியுடன் நிறைய சாதிக்க முடியும்" என சொல்வதோடு மட்டுமில்லாமல்,

தன்னுடைய வாழ்க்கையில் செய்து காட்டியும் இருக்கிறார் வைஷ்ணவி.

குடும்பத்தை கவனித்துக்கொண்டு, தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதிலும் முனைப்போடு செயல்பட்டு வரும் பெண்களில் இவரும் ஒருவர். சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி 'ஈவன்ட் பிளானிங்' எனப்படும் நிகழ்ச்சிகளை நிர்வகித்துக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்னைப் போல பல இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கவும் செய்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

உங்களைப் பற்றி..?

என்னுடைய சொந்த ஊர் கும்பகோணம். எனது கொள்ளுத் தாத்தா டி.கே. சாமிநாதபிள்ளை, நடனத்தில் கலைமாமணி விருது பெற்றவர். அம்மா கஸ்தூரி ஓய்வு பெற்ற ஆசிரியை. அப்பா குணாபதி, அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நான் பொறியியல் படித்து முடித்து, பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தேன். பின்பு அதில் இருந்து விலகி, கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் ஈவன்ட் பிளானிங் நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

ஈவன்ட் பிளானிங் நிறுவனம் ஆரம்பிக்க காரணம்?

நான் கல்லூரியில் படிக்கும்போதே, பகுதி நேர பணியாக நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கும் வேலைகளைச் செய்து வந்தேன். கல்லூரி முடித்து வேலைக்குச் சென்ற சில வருடங்களில் பெற்றோர் எனக்கு திருமணம் நடத்தி வைத்தனர். திருமணத்துக்கு பிறகு வேலைக்குச் செல்வதை நான் விரும்பவில்லை. ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அந்த சமயத்தில் என்னுடைய சீமந்தத்திற்காக ஒரு ஈவன்ட் பிளானிங் நிறுவனத்தை அணுகி ஏற்பாடு செய்தபோது அவர்கள் வசூலித்த கட்டணம் அதிகமாக இருந்தது.

பின்பு என்னுடைய மகனின் முதல் பிறந்த நாளிற்கு நாங்களே ஈவன்ட் பிளானிங் செய்தோம். அதற்கு குறைந்த செலவே ஆனது. அதன் மூலம் திட்டமிட்டு செயல்பட்டால் குறைந்த செலவில் வசதிக்கு ஏற்ப எளிதாகவும், நேர்த்தியாகவும் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்று தெரிந்து கொண்டேன்.

நேரமில்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்ற காரணத்தால் தான் ஈவென்ட் பிளானிங் நிறுவனங்களை அணுகுகிறோம். அதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைவாக இருந்தால் நடுத்தர வர்க்கம் மற்றும் எளிய மக்களும் பயன்பெறுவார்கள் என்று நினைத்தேன்.

திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்ளும்போது கட்டணங்களை வெகுவாக குறைக்க முடியும் என்று அறிந்ததால், சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். இப்போது எனது நிறுவனம் மூலம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஐதராபாத் மற்றும் பெங்களூருவிலும் 'ஈவன்ட் பிளானிங்' செய்து தருகிறோம்.

ஈவன்ட் பிளானிங் மூலம் ஒவ்வொரு வேலையையும் ஏற்பாடு செய்வதற்கு செலவழிக்கும் நேரம் மிச்சமாகும். அலைச்சல் குறையும். நிகழ்ச்சியை நடத்தும் குடும்பத்தினரே அனைத்து பொறுப்புகளையும் ஏற்று நடத்த வேண்டிய சுமைகள் குறையும். எவ்வித பதற்றமும் இல்லாமல், நிம்மதியாக விழாவின் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்கலாம்.

உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றி?

ஒவ்வொரு பெண்ணும் 'தனியாக தொழில் செய்யப் போகிறேன்' என்று சொல்லும்போது, ஆரம்பத்தில் குடும்பத்தின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல்களும், பிரச்சினைகளும் வரும். ஆனால் எனக்கு அதுபோன்ற எந்த தடையும் இல்லை. என் பெற்றோர் முழு மனதோடு 'உனக்குப் பிடித்ததை செய்' என உற்சாகப்படுத்தி, எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். என்னுடைய கணவரும் எனக்கு பக்க பலமாக இருந்தார். ஈவன்ட் பிளானிங் என்பது காலவரையறையற்ற வேலையாகும். சில நேரங்களில் அதிகாலையில் செல்ல வேண்டியதாக இருக்கும்.

சில நேரங்களில் இரவு முழுவதும் வேலை இருக்கும். இப்படியான சூழலில் என்னை அனுசரித்து ஊக்கப்படுத்தியது எனது குடும்பம். என் குழுவினர் ஆதரவும் எனக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. அவர்களால் தான் என்னுடைய நிறுவனமும், எனது அனுபவமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

தொழில் மற்றும் குடும்பம் இரண்டையும் எப்படி கவனித்துக்கொள்கிறீர்கள்?

குடும்பமும், தொழிலும் இரண்டு கண்களாகும். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவதை கட்டாயமாக வைத்திருக்கிறேன். குடும்பத்துடன் இருக்கும்போது வேலையைப் பற்றி யோசிக்க மாட்டேன். அவ்வப்போது வேலைகளில் இருந்து கொஞ்சம் விடுபட்டு குடும்பத்தினருடன் வெளியே செல்வது, வேலையை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் குடும்பத்தினருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிடுவது, உரையாடுவது என நேரத்தை பிரித்துக்கொள்வேன்.

தொழில் தவிர்த்து செய்யும் வேறு செயல்பாடுகள் என்ன?

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறேன். பல்வேறு விதமான புதிய தொழில் யோசனைகளுடன் இருக்கும் இளம்பெண்களை தொழில் முனைவோராக்கவும், இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தே சுயதொழில் புரியவும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். புதிதாக தொழில் தொடங்கிய பெண்களுக்கு ஆலோசனை வழங்கி, அவர்கள் தொழிலில் மேன்மையடைய எங்கள் குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பெண்கள் தங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு, அதற்குள்ளேயே வாழாமல் வெளியே வரவேண்டும். சமையல் கலை, ஓவியம், நடனம் என ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமைகளைக் கண்டுபிடித்து அவற்றை மேம்படுத்திக்கொள்ளுங்கள். படிப்பிற்கு தகுந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பை விடுத்து, விருப்பம் மற்றும் திறமை இருந்தால் எதிலும் சாதிக்கலாம் என்று முயற்சியுங்கள். ஒரு சில சமயங்களில் இந்த முயற்சியில் துவண்டு போவது, தோற்றுப்போவது இயல்பு தான். அந்த நேரத்தில் தான் உங்களை நீங்கள் அதிகமாக நம்ப வேண்டும். விடாமுயற்சி என்பது வெற்றிக்கு மிக அவசியம். வட்டத்தை தாண்டி வான் நோக்கி சிறகடியுங்கள்.


Next Story