விடுதலைக் கனலில் நீந்திய வீர மங்கையர்கள்


தினத்தந்தி 14 Aug 2022 1:30 AM GMT (Updated: 14 Aug 2022 1:30 AM GMT)

விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களை, தைரியத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு, எதிர்த்து நின்ற பெண்கள் பலர். அத்தகைய பெண் சிங்கங்களில், சிலரது தியாக வரலாறு பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்திய நாட்டின் விடுதலைப் போரில் ஏராளமான பெண்கள் பங்கேற்று போராடி இருக்கிறார்கள். பீரங்கிகள், அன்றைய நவீன ரக துப்பாக்கிகள் போன்றவற்றுடன் வந்த ஆங்கிலேயர்களை, தைரியத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு, எதிர்த்து நின்ற பெண்கள் பலர். அத்தகைய பெண் சிங்கங்களில், சிலரது தியாக வரலாறு பற்றி இங்கு பார்க்கலாம்.

டாக்டர் ருக்மணி லட்சுமிபதி

சீனிவாச ராவ் - சூடாமணி தம்பதியருக்கு 1892-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் ருக்மணி பிறந்தார். இளம் வயதிலேயே அவருக்கு நடக்க இருந்த திருமணத்தை, வீரேசலிங்கம் பந்துலு என்பவர் தடுத்து, கல்வி கற்க வழி செய்தார். அதன்மூலம் பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு என்று கல்வியில் மேன்மை பெற்ற ருக்மணி, டாக்டர் லட்சுமிபதியை திருமணம் செய்து கொண்டார்.

1930-ம் ஆண்டு ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது, ருக்மணி உட்பட பலரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலகட்டத்தில், நாட்டில் கலவரம் நடந்தபோது, காந்தியின் மேற்பார்வையில் இந்திரா காந்தி சமூக சேவை செய்தார். அதைப் போல, தென்னகத்தில் டாக்டர் ருக்மணி 'வானர சேனை' எனும் அமைப்பை ஏற்படுத்தி, சமூக சேவையில் ஈடுபட்டார். மகாத்மா காந்தி சென்னை வந்தபோது அவரது வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களில் இவரும் ஒருவர்.

1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், 1937-ல் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் - சென்னை சட்டசபை மேலவை துணை சபாநாயகர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். பல்வேறு சமூக சீர்திருத்த செயல்பாடுகளில் ஈடுபட்ட டாக்டர் ருக்மணி, 1951-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ம் நாள் காலமானார்.

டாக்டர் சவுந்திரம் ராமச்சந்திரன்

மதுரை டி.வி.சுந்தரம் - லட்சுமி அம்மாள் ஆகியோரின் மகளாகப் பிறந்தவர் சவுந்திரம். 1935-ம் ஆண்டு டெல்லியிலுள்ள லேடி ஹார்டிஞ்ச் மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். மகளிர் மருத்துவத்திலும் தேர்வு பெற்று, சென்னையில் இரண்டு ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினார்.

படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து, அவர்களது ஆதரவுடன் சுதந்திரப் போரில் பங்கேற்றார். 1940-ம் ஆண்டு தன்னுடன் சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில், இவர் கேரளா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விடுதலைக்குப் போராடினார். விடுதலைக்காக சிறை சென்ற தியாகிகளின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார்.

1943-ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் சேர்ந்து சமூகப் பணிகளை மேற்கொண்டார். 1945-ல் கஸ்தூரிபாய் காந்தி நினைவு அறக்கட்டளைக்குத் தமிழ்நாட்டு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

1957-ம் ஆண்டு வேடசந்தூர் தொகுதி தேர்தலில் வென்று சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தை டாக்டர் பி.என். ராமசுப்பிரமணியத்துடன் சேர்ந்து உருவாக்கினார். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி இவற்றுக்காகவே இறுதிவரை பாடுபட்டார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள்

வை.மு.கோதைநாயகி 1901-ம் ஆண்டு என்.எஸ்.வெங்கடாச்சாரி மற்றும் பட்டம்மாளுக்கு மகளாகப் பிறந்தார்.

தேசபக்தி மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக பிரச்சினைகளில் தனது கருத்துகளை நாவல்கள் மூலம் பிரசாரம் செய்தார். பல அரசியல் கூட்டங்களில் பங்கேற்று பேசினார். அவரது பேச்சுத் திறமையால், பாரதி, ராஜாஜி உள்ளிட்ட பல தலைவர்கள் கவரப்பட்டனர்.

பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியராகவும், சுதந்திர போராட்ட வீராங்கனையாகவும் விளங்கினார். 1925-ல் மகாத்மாவின் எளிமையால் ஈர்க்கப்பட்ட கோதைநாயகி, தனது தங்க மற்றும் வைர நகைகளை களைந்து, எளிய கதர் சேலைகளை மட்டுமே அணிந்தார்.

1931-ம் ஆண்டு மகாத்மாவின் அழைப்பை ஏற்று, சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, 8 மாத சிறை தண்டனை பெற்றார்.

ஏழைப்பெண்களின் பிரசவத்துக்கு இலவச உதவிகளைச் செய்தார். 1948-ம் ஆண்டு, 'மகாத்மாஜி சேவா சங்கம்' என்ற, ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் சங்கத்தைத் தொடங்கினார். அப்போதைய அரசு அவருக்கு 10 ஏக்கர் நிலத்தை வழங்கியது. ஆனால், அவர் நிலத்தை, வினோபா பாவே பூமிதான இயக்கத்துக்கு அளித்து விட்டார்.

கமலா ராமசாமி

மாணவப் பருவத்திலேயே நாட்டின் விடுதலைக்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திய பெருமைக்கு உரியவர், கமலா ராமசாமி.

ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த கமலா, தீவிரமான காங்கிரஸ் ஈடுபாடு கொண்ட குடும்பத்திலிருந்து வந்ததால், இயல்பாகவே விடுதலை போராட்ட உணர்வு கொண்டவராக இருந்தார்.

மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் ஆர்வம் அவருக்குள் இருந்தது. குறிப்பாக, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்துக்கு ஆதரவாக, மாணவர்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வெகு சில துணிச்சல் மிக்க விடுதலை வீராங்கனைகளில் அவரும் ஒருவர். விடுதலை காற்றை சுவாசித்து, வாழ்ந்த பின்னரே அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

வீரத்தாய் பத்மாசனி

பாரதியாரின் பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் பரப்பிய பெருமை இவருக்கு உண்டு. மதுரை அருகில் உள்ள சோழவந்தானில், 1897-ல் பிறந்தார். பருவ வயதில், மதுரை சீனிவாச வரதன் என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது. சீனிவாச வரதனும், மகாகவி பாரதியாரும் நெருங்கிய நண்பர்கள்.

1922-ல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக வரதன் கைது செய்யப்பட்டார். செய்தி அறிந்து வந்த

பத்மாசனி தனது கணவருக்கு திலகமிட்டு மாலை அணிவித்து சிறைக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர், பத்மாசனி முழுமூச்சாக நாட்டின் விடுதலைப் போரில் தனி ஆளாக குதித்தார். கணவரின் சிறைவாசம் காரணமாக, தங்க நகை அணிய மறுத்ததுடன், ஒருவேளை உணவே அருந்தினார். ராட்டையில் நூல் நூற்று, கிடைக்கும் வருமானத்தில்தான் சாப்பிட்டார்.

தினமும் மாலை நேரத்தில் பாரதியார் பாடல்களை பாடி, வீடுவீடாகச் சென்று கதர் விற்பார். பழைய பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. இந்தியா முழுவதும் எரியும் சுதந்திர அக்னியில் இணைந்து போராட பெண்கள் முன் வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

விடுதலை போரில் தனது மூன்று குழந்தைகளை பலிகொடுத்த அந்த தாய், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு 14.1.1936 அன்று மறைந்தார்.


Next Story