டெரகோட்டா நகைகள் உற்பத்தியில் ஜொலிக்கும் கவுஷி
கைவினைத் தயாரிப்பு என்பதால், ஒரு அணிகலன் செய்வதற்கு அதிக நேரம் ஆகும். முதலில் டெரகோட்டா செய்வதற்கான களிமண்ணில் நகையை செதுக்கி, அதை அறை வெப்பநிலையில் உலர வைக்க வேண்டும். பின்பு அதை நெருப்பில் சுட்டு எடுக்க வேண்டும். அதன் பிறகு நகையின் மேல் நமக்குத் தேவையான வண்ணங்களைத் தீட்டலாம். இவ்வாறு ஒரு நகையைத் தயாரித்து முடிக்க 5 முதல் 6 நாட்களாகும்.
'ஒரு பெண் சுயமாக சம்பாதிக்கும்போது, அவளது சுயமரியாதை காக்கப்படுகிறது. அதை என்னைப் போல மற்ற பெண்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, நான் செய்து வரும் டெரகோட்டா தொழில் உதவுகிறது" என்கிறார் கவுஷி சக்திவேல். எம்.இ., மற்றும் எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், கடந்த 5 ஆண்டுகளாக டெரகோட்டா கலையின் மூலம் 800-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, சொந்தக்காலில் நிற்பதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
தந்தை ஜவுளித் துறையிலும், கணவர் நிதித் துறையிலும் தொழில் செய்துவர, இரண்டில் ஏதேனும் ஒரு தொழிலைத் தேர்வு செய்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கவுஷி. அத்தகைய சூழ்நிலையில், தனக்கென தனிப்பாதையாக அவர் தேர்வு செய்தது தான் டெரகோட்டா நகைகள் தயாரிக்கும் தொழில். ஆனால், அவர் அதை தனக்கு மட்டும் வருமானம் ஈட்டித் தரும் தொழிலாகபார்க்காமல், வறுமை நிலையில் இருந்த பல பெண்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்கும் தொழிலாகவும் ஆக்கினார்.
இதோ அவரே பேசுகிறார்.
''நான் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு, அப்பாவின் தொழிலை கவனித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். ஒரு மாத காலம் அங்கு பணி புரிந்தபோது, பல அனுபவங்களைப் பெற்றேன். அவைதான் சுய சம்பாத்தியத்தின் அவசியத்தை எனக்கு உணர்த்தியது. ஒரு மாத முடிவில் அது எனக்கான தளமில்லை என்பதை உணர்ந்து, டெரகோட்டா நகைத் தயாரிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தேன். எனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கும், பிற பெண்களுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இத்தொழில் ஏற்றதாக இருந்தது.
என்னுடைய 12 வயதில், எனக்கு அறிமுகமாகியது டெரகோட்டா நகைகள். சுய கற்றல் மூலமே நகைத் தயாரிப்பை கற்றுக் கொண்டேன். தொழில் தொடங்கியதும், முதன் முதலில் தங்கைக்காக ஒரு டெரகோட்டா நகையை செய்து கொடுத்தேன். என் முயற்சியையும், ஆர்வத்தையும் பார்த்த அவள், அதைத் தனது தோழியிடம் விற்றுவிட்டாள். அதைத் தொடர்ந்து, அவளது கல்லூரித் தோழிகளிடம் இருந்து ஆர்டர் பெற்றுக் கொடுத்தாள். எனது தொடக்கக்கால தொழில் பயணத்தின் தூணாக இருந்தது அவள்தான். நான் தயாரித்த நகையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ஆர்டர்களைப் பெற்றுக் கொடுக்க உதவினாள்.
கைவினைத் தயாரிப்பு என்பதால், ஒரு அணிகலன் செய்வதற்கு அதிக நேரம் ஆகும். முதலில் டெரகோட்டா செய்வதற்கான களிமண்ணில் நகையை செதுக்கி, அதை அறை வெப்பநிலையில் உலர வைக்க வேண்டும். பின்பு அதை நெருப்பில் சுட்டு எடுக்க வேண்டும். அதன் பிறகு நகையின் மேல் நமக்குத் தேவையான வண்ணங்களைத் தீட்டலாம். இவ்வாறு ஒரு நகையைத் தயாரித்து முடிக்க 5 முதல் 6 நாட்களாகும்.
எனது தயாரிப்புகளைப் பார்த்த பல பெண்கள், தங்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கேட்டனர். ஆனால், நேரமின்மை காரணமாக என்னால் அந்த முயற்சியை மேற்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், அவர்களது வருமானத்துக்கு வழிவகை செய்ய எண்ணினேன். அப்போதுதான் உற்பத்திக் கூடத்தை உருவாக்கி, மொத்த விற்பனைக்கு நகைகளை விற்று, லாபம் பெறும் வகையில் மறுவிற்பனையாளர்களை உருவாக்கலாம் என்று முடிவெடுத்தேன். இது அவர்களுக்கு எளிதான வழிமுறையாகவும் இருந்தது.
பயிற்சி வகுப்புக்குக் கட்டணம் செலுத்தி, மூலப் பொருட்களை வாங்கி, நகைகளை உற்பத்தி செய்து, பிறகு வாடிக்கையாளர்களிடம் விற்பதைக் காட்டிலும், மறுவிற்பனையாளராக அதிக முதலீடின்றி வருமானம் ஈட்டுகின்றனர். இதில் குறைந்தபட்ச லாப நோக்கு என்பதே என் கொள்கை.
இந்தத் துறையில் போட்டியாளர்கள் அதிகம். எனவே வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான புதுப்புது டிசைன்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால், என்னுடைய தனித்து
வமான நகை டிசைன்களை மற்றவர்கள் மறுஆக்கம் செய்து விற்பனை செய்வதைப்பற்றி நான் கவலை கொள்வதில்லை.
நிச்சயமாக எனது டிசைன் அவர்களது பாணியில் வேறொரு படைப்பாக மாறுகிறது. இவ்வாறு ஒவ்வொரு டெரகோட்டா கலைஞரும் டிசைனை அப்டேட் செய்து கொண்டே இருப்பதால்தான், ஆண்டுகள் கடந்தும் டெரகோட்டா நகைக்கு மவுசு இருக்கிறது.
நான்கு ஆண்டுகளில், இந்தியா மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பலர் என் தயாரிப்புகளை விற்பனை செய்கின்றனர்.
பெரிய அளவிலான முதல் ஆர்டர் வெளிநாட்டில் இருந்து கிடைத்தபோது, நான் ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தேன். அந்த நேரத்திலும் தொழிலைக் கைவிடாமல் வாடிக்கையாளர் கேட்டவாறு டெரகோட்டா நகைகளைத் தயாரித்துக் கொடுத்தேன். குழந்தை பிறப்பதற்கு முதல் நாள் வரை நகைத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தேன்.
பெண்கள் குடும்பத்தின் ஆதரவின்றி பணியிலோ, தொழில் முயற்சியிலோ வெற்றி பெறுவது கடினம். அந்த வகையில் என் கணவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவரது தொழிலுக்கான பணிகளை, ஒரு ஆண்டுக்கு அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு, நகைகளுக்கு வண்ணம் தீட்டும் வேலையில் எனக்கு உதவினார்.
ஆனால், என்னிடம் வேலை கேட்டு வரும் பெண்களின் நிலை வேறு விதமாக இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் பணிக்குச் செல்வதை குடும்பத்தார் ஆதரிப்பதில்லை. அதனால், அத்தகைய பெண்களுக்கு அவர்களுக்கு வசதியான பணி நேரத்தை ஒதுக்குவேன் அல்லது வீட்டில் இருந்தே நகைகளை தயாரித்துக் கொடுக்கச் சொல்லுவேன். இவ்வாறு 9 பெண்கள் என் உற்பத்திக்கூடத்தில் நேரடியாக ஊழியர்களாக பணிபுரிகின்றனர்.
அடுத்ததாக, திருநங்கைகளை டெரகோட்டா கலைஞர்களாக்க வேண்டும் என்று முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன். தினமும் பயணிக்கும் சாலையில், பல திருநங்கைகளை கடந்து செல்வேன். அன்றாடப் பிழைப்புக்காக அவர்கள் படும் சிரமங்கள் அதிகம். எதிர்காலத்தில் அவர்களுக்கு டெரகோட்டா கலையைக் கற்றுக் கொடுத்து, நிம்மதியான, மகிழ்வான வாழ்க்கை வாழ வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை'' என்று தனது எதிர்காலக் கனவுகளைக் கூறி முடித்தார் கவுஷி.