பழையவற்றை புதுமையாக்கும் நந்தனா


பழையவற்றை புதுமையாக்கும் நந்தனா
x
தினத்தந்தி 4 Sept 2022 7:00 AM IST (Updated: 4 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

நான் அணிய முடியாமல் போன நல்ல நிலையில் இருக்கும் பழைய ஆடைகளை தூக்கியெறிய மனமில்லாமல் அவற்றை மாற்றி அமைப்பேன். இவ்வாறு வடிவமைத்த ஆடைகள் பார்ப்பதற்கு அழகாகவும், புதுமையாகவும் இருந்தன. அவற்றைப் பார்த்த எனது பெற்றோர் பாராட்டினார்கள். அதுவே இத்தகைய ஆடை வடிவமைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு என்னைத் தூண்டியது.

புகைப்படங்கள், பரிசுகள் போல, ஒரு சில ஆடைகளும் நமது வாழ்வில் நினைவு பொக்கிஷங்களாக இருக்கும். காதல் கணவரை கைப்பிடிக்கும் போது அணிந்த திருமணப் புடவை, முதல் முதலாக அண்ணன் வாங்கிக்கொடுத்த சுடிதார், ஆசையாக கணவர் பரிசளித்த பட்டுச்சேலை, தோழிகள் அனைவரும் ஒன்றாக ஒரே நிறத்தில் வாங்கிய டிசைனர் புடவை என பல உடைகள், நமது வாழ்வில் நடந்த இனிய தருணங்களின் சாட்சிகளாக அலமாரியில் இருக்கும். கால மாற்றத்தால் அவற்றை அணிய முடியாத நிலை ஏற்படும்போது, காட்சிப்பொருளாக மட்டும் வைத்து அவ்வப்போது பார்த்துக்கொண்டு இருப்போம்.

இவ்வாறு உங்களுக்கு மிகவும் பிடித்த சேலை, தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவகையில் அனார்கலி சுடிதாராக உருமாற்றம் பெற்றால் ஆனந்தத்தோடு அணிந்துகொள்வீர்கள் இல்லையா? அத்தகைய மேஜிக்கைதான் செய்து வருகிறார் நந்தனா செங்குட்டுவன். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டைச் சேர்ந்த இவர், பி.காம். மற்றும் எம்.எஸ்.டபுள்யூ. படித்தவர். சுயமாக தொழில் தொடங்க விரும்பிய நந்தனா, அது வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்ததன் விளைவாக, பழைய ஆடைகளை காலத்துக்கு ஏற்றது போல புதிய உருவில் மாற்றிக் கொடுக்கும் நிறுவனம் உருவானது.

ஆசையாக வாங்கிய ஆடைகளை அணிய முடியாமல், அலமாரியில் வைத்து ஏக்கப் பெருமூச்சு விட்ட பலரும், நந்தனாவின் கைவண்ணத்தால் அவற்றை புதிய வடிவில் அணிந்து மகிழ்கின்றனர். அவருடன் ஒரு சந்திப்பு…

பழைய உடைகளை புதுமையான வடிவத்தில் மாற்றி அமைக்கும் எண்ணம் தோன்றியது எப்படி?

நான் அணிய முடியாமல் போன நல்ல நிலையில் இருக்கும் பழைய ஆடைகளை தூக்கியெறிய மனமில்லாமல் அவற்றை மாற்றி அமைப்பேன். இவ்வாறு வடிவமைத்த ஆடைகள் பார்ப்பதற்கு அழகாகவும், புதுமையாகவும் இருந்தன. அவற்றைப் பார்த்த எனது பெற்றோர் பாராட்டினார்கள். அதுவே இத்தகைய ஆடை வடிவமைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு என்னைத் தூண்டியது.

இதைத் தொழிலாக ஆரம்பித்தது குறித்து சொல்லுங்கள்?

எனது அப்பா செங்குட்டுவன் பர்னிச்சர் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் தனது வித்தியாசமான யோசனைகளாலும், சொந்த முயற்சியாலும் தொழில் தொடங்கி வெற்றி கண்டவர். என்னையும் தொழில் தொடங்கும்படி கூறிக் கொண்டே இருப்பார். வேலைக்குச் செல்வதை விட சொந்தமாகத் தொழில் தொடங்குவதை முதல் திட்டமாக வைக்கும்படி சொல்வார். எனக்கு ஆர்வம் இருக்கும் துறையில் தொழிலை ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என்று, ஆடைகளை மறுவடிவமைப்பு செய்யும் தொழிலைத் தொடங்கினேன்.



இந்த தொழிலைத் தொடங்குவதற்கு குடும்பத்தின் ஆதரவு எவ்வாறு இருந்தது?

ஆடைகளை மறுவடிவமைப்பு செய்யும் எண்ணத்தைக் கூறியதும், சிறிதும் தயங்காமல் எனது அம்மா சித்ரா அவரது புடவைகளை என்னிடம் கொடுத்தார். அவர் கொடுத்த 7 புடவைகளில் அவரது திருமண புடவையும் ஒன்று. அவரின் நம்பிக்கையை வீணாக்காமல், பெரிதும் முயற்சித்து நான் டிசைன் செய்த அனைத்து உடைகளும் சிறப்பாக இருந்தன. அதை அடிப்படையாக வைத்து தான் தொழில் தொடங்கினேன். எனது தந்தையும் பொருளாதார உதவி செய்வது மட்டுமின்றி, நான் மனதளவில் துவண்டு போகும்போதெல்லாம் என்னை ஊக்குவித்து வழி நடத்தினார்.

தொழில் தொடங்குவதற்கு உரிய தகுதிகளாக நீங்கள் நினைப்பது என்ன?

முதலில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். ஏனென்றால், முயற்சிகள் மேற்கொண்டும் பலன் கிடைக்காமல் போகும் தருணங்களில், நம்மை நாமே தேற்றிக்கொண்டு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வதற்கு தன்னம்பிக்கை முக்கியமானது.

அடுத்து நிலையான உறுதி. எந்த சமயத்திலும் ஆரம்பித்த தொழிலை பாதியில் விட்டுவிடக்கூடாது. கடைசியாக, குறுகிய கால இலக்குகள். உதாரணமாக, இந்த மாத இறுதிக்குள் இத்தனை வாடிக்கையாளரை பெற வேண்டும். விற்பனையை அதிகரிக்க வேண்டும் என சிறு சிறு இலக்குகளை நமக்கு முன் நிறுத்தி, அதற்கேற்ப உழைக்க வேண்டும்.

எனது தொழிலில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, அதை அப்படியே செய்ய மாட்டேன். அதில் உள்ள நல்லதையும், எனக்கு பொருத்தமானதையும் மட்டுமே எடுத்துக்கொள்வேன். மற்றவர்கள் நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளை கூறும்போதும், அவை என்னைக் காயப்படுத்தாத வண்ணம் இயல்பாக எடுத்துக்கொள்வேன்.

உங்களைப்போல தொழில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

நான் தொழில் தொடங்கிய புதிதில் என்னை பலரும் கேட்ட கேள்வி 'நீ ஏன் வேலைக்குச் செல்லவில்லை?' என்று தான். ஆனால் நமக்கு எது விருப்பமோ, அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

நமக்கு எது சரியாக இருக்கும் என்பதைக் கண்டறிந்து, அதனை முதலில் நமது பெற்றோரிடம் தெளிவாக விளக்க வேண்டும். நாம் விரும்புவதைப் பற்றிய முழுமையான புரிதல் இருந்தால் மட்டுமே, நம்மால் அதனை தெளிவாக சொல்ல முடியும். சொன்னதும் பெற்றோர் உடனே ஆதரிப்பார்கள் என்று நினைக்கக்கூடாது. நிதானமாக இருந்து அவர்களது சம்மதத்தை பெற வேண்டும்.

அதன் பின்பு நமது தொழில் பற்றிய முழுமையான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்லைனில் தகவல்கள் இலவசமாக கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை தேடி படிப்பது முக்கியம்.

மற்றவர்கள் சொல்லும் யோசனைகளையும் கேட்டு, அதில் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களை பார்த்து தொழில் செய்வது, பலனளிக்காது. நமக்கான தனித் திறமையோடு, நமது சொந்த யோசனையோடு தொழில் தொடங்கினால்தான் நிலைத்து நிற்க முடியும். என்னைப் பொறுத்தவரை எனது தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்துகிறேன்.

உங்களின் எதிர்கால இலக்கு என்ன?

துணி வகைகள் மக்கக்கூடியவை என்றாலும், ஆண்டுதோறும் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதுவே பெரும் சுற்றுச்சூழல் மாசுவாக உருவெடுக்கிறது. நிலத்துக்கு அடியில் புதைக்கப்படும் பாலிஸ்டர் போன்ற துணி வகைகளில் இருக்கும் பிளாஸ்டிக், பூமிக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் கால்நடைகள் அவற்றை உட்கொள்ளும்போது அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. ஏற்கனவே பயன்படுத்திய துணி அல்லது பொருளை, அதன் தரத்தை அதிகரிக்கும் வகையில் புதுமையான முறையில் மறு வடிவமைப்பு செய்து மீண்டும் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மாசுவை கட்டுப்படுத்தலாம். இதையே எனது இலக்காகக் கொண்டு செயல்படுகிறேன்.


Next Story