உள்ளத்தில் உறுதி இருந்தால் எதுவும் தடையில்லை - உலகம்மாள்

எனது அப்பா திருநெல்வேலியில் மழலைப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். எனது பள்ளி விடுமுறை நாட்களில் அங்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பேன். கல்லூரி படித்தபோது மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தேன். அப்போதுதான் கல்வி சார்ந்த ஆலோசனைகளை பிறருக்கு வழங்குவதிலும் ஆர்வம் அதிகரித்தது.
"உடலில் ஏற்படும் குறைபாடுகள் சாதிப்பதற்கு ஒரு தடையில்லை. மனவலிமையும், முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும். நான் அரசு பள்ளியில் தான் பயின்றேன். அரசு பள்ளி மாணவர்களை சந்திக்கும்போது இதைக் கூறுவேன். இதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இவ்வாறு எனது வாழ்க்கையை உதாரணமாகக் காட்டி பிறருக்கு நம்பிக்கை அளிக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது" என்கிறார் உலகம்மாள்.
இவர் இளம் தலைமுறை மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடி, தன்னம்பிக்கை அளித்து, அவர்கள் வாழ்வில் வெற்றியடைய வழிகாட்டியாக இருக்கிறார். பத்து வயது சிறுமியாக இருந்தபோது போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டார் உலகம்மாள். கால்கள் சரியாக இயங்காத போதும், மனதளவில் சோர்ந்து போகாமல் உறுதியாய் முன்னேறி இன்று சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறார்.
கல்வி ஆலோசகராக பலருக்கும் வெற்றிக்கான உந்துதலாக விளங்கும் இவர், தன்னைப் போல சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார். இவரது கல்வி சேவையையும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையையும் பாராட்டும் விதமாக பல்வேறு பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்துள்ளன. இவரது பேட்டி…
"நான் பிறந்தது வளர்ந்தது திருநெல்வேலியில். தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். வணிகவியல், ஆசிரியர் பயிற்சி மற்றும் கவுன்சலிங் அண்ட் சைக்கோதெரபி எனும் உளவியல் சார்ந்த படிப்பிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். 2001 முதல் 2014-ம் ஆண்டு வரை சென்னையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியில் 14 ஆண்டுகளாக நிர்வாகப் பணியில் இருந்தேன். அங்கு பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் கல்வி ஆலோசனை வழங்கி வந்தேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில், 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை கல்வி ஆலோசகராக பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறேன்.
உங்கள் கல்வி சேவை எப்படி ஆரம்பித்தது?
எனது அப்பா திருநெல்வேலியில் மழலைப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். எனது பள்ளி விடுமுறை நாட்களில் அங்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பேன். கல்லூரி படித்தபோது மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தேன். அப்போதுதான் கல்வி சார்ந்த ஆலோசனைகளை பிறருக்கு வழங்குவதிலும் ஆர்வம் அதிகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து இந்த ஆலோசனை பணிகளைத் தொடங்கினேன். 2016-ம் ஆண்டு முதல் அரசிடம் இருந்து உரிய ஆணை பெற்று மாநகராட்சி பள்ளிகள் பலவற்றுக்கு சென்று மாணவர்களை சந்தித்து வருகிறேன்.
உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை சந்தித்து ஆலோசனை வழங்கியிருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறேன். கொரோனா தொற்று காலத்திலும் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வேலைவாய்ப்பு மையங்கள் போன்றவை நடத்தும் நிகழ்ச்சியில் ஆன்லைனில் பங்குபெற்று உளவியல் மற்றும் உயர்கல்வி குறித்து உரையாற்றியுள்ளேன்.
காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளிக்கும் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடி ஆலோசனை வழங்கி உள்ளேன். மாற்றுத்திறனாளிகளையும் சந்தித்து வருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழக காவல் துறையினருக்கும் உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறேன். உளவியல் ஆலோசனை தேவைப்படும் பலரும் என்னை தொடர்பு கொள்வதுண்டு. அவர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கி வருகிறேன்.
மாணவர்களுக்கு எத்தகைய ஆலோசனையை வழங்குவீர்கள்?
பள்ளிப்படிப்பை முடித்ததும் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்ற குழப்பம் பல மாணவர்களிடம் இருக்கும். இதற்காக உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்குவேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இறுதி தேர்வைக் குறித்த பயத்தை நீக்கும் வகையில் உளவியல் ஆலோசனை வழங்குவேன். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டின் மூலமும் உயர்ந்த நிலையை அடைய முடியும் என ஊக்கமளிப்பேன். அறநெறி சார்ந்த விஷயங்களை, கதைகள் மூலம் கற்றுக் கொடுக்கிறேன். அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தி வருகிறேன். இவ்வாறு திறன் மேம்பாடு, நாட்டுநடப்பு, சுயசார்பு, உளவியல் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பிக்கிறேன்.
உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி சொல்லுங்கள்?
2017-ம் ஆண்டில் 'பிரேவ் லேடி' விருது மற்றும் 'இரும்பு பெண்மணி' விருது பெற்றேன். 2018-ல் 'பாத் பிரேக்கர் விருது', 2019-ல் 'நம்பிக்கை விருது', 2020-ல் 'சமூகச் சிற்பி' விருது, 2021-ல் 'சிறந்த மனித நேய விருது' போன்ற பல விருதுகள் பெற்றிருக்கிறேன். பத்மஸ்ரீ விவேக் நினைவாக 'கலைச் செல்வர்' விருது பெற்றேன். 'பதின்பருவ சவால்கள்' எனும் தலைப்பில் ஆற்றிய உரைக்காக 'ஆரஞ்சு உலக சாதனை சான்றிதழ்' பெற்றேன். நடப்பு ஆண்டில் 'ஸ்ரீமதி சோனியா காந்தி விருதுகள் 2022', 'தங்க மங்கை விருது 2022' ஆகிய விருதுகள் பெற்றுள்ளேன்.
உங்கள் இலக்கு என்ன?
பல இடங்களுக்கு பயணித்து மக்களைப் பற்றி படிக்க வேண்டும். கடைசி மூச்சு இருக்கும் வரை, கற்ற கல்வியை பலருக்கும் பயன்படும் வகையில், கல்வி மற்றும் உளவியல் ரீதியாக கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது லட்சியம். இன்னும் பல மாணவர்களோடு உரையாட வேண்டும். அதோடு முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பது எனது ஆசை.






