குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குங்கள்


குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குங்கள்
x
தினத்தந்தி 26 Jun 2022 7:00 AM IST (Updated: 26 Jun 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

வார இறுதி நாட்களில் மற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல், குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, ஒன்றாகச் சாப்பிடுவது, கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது போன்ற செயல்கள், குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும்.

பொருளீட்டுவதற்காக தாய்-தந்தையும், கல்வி மற்றும் கலைகளை கற்றுக்கொள்வதற்காக பிள்ளைகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள், தொலைக்காட்சி தொடர்களின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். இவற்றையெல்லாம் கடந்து மீதி இருக்கும் நேரத்தை, சமூக வலைத்தளங்களும், செல்போன் விளையாட்டுகளும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. குடும்பமாக அனைவரும் சேர்ந்து வாழ்ந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு வட்டத்துக்குள் தனித்தே இருக்கின்றனர். இதுதான் பல குடும்பங்களின் இன்றைய நிலை.

ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதற்கும், தங்கள் இன்ப-துன்பங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரமில்லாமல் போகிறது. இதனால் பலரின் வாழ்க்கை திசைமாறிப் போகும் ஆபத்து அதிகரித்து வருகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துக்காக நேரம் செலவழிக்க வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். குழந்தைகள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்க வேண்டும்.

இதன் மூலம், குழந்தைகள் மனதில் உள்ளவற்றை புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நல்வழிப்படுத்த முடியும். கணவன்- மனைவி ஒற்றுமையை அதிகரிக்க முடியும். குடும்பம் என்ற கட்டமைப்பு உறுதி பெற்றால், சமுதாயத்தில் நன்மைகள் அதிகரிக்கும். குற்றங்கள் குறையும்.

வார இறுதி நாட்களில் மற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல், குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, ஒன்றாகச் சாப்பிடுவது, கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது போன்ற செயல்கள், குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும். குடும்பத்தின் அன்பும், அரவணைப்பும் தனி மனிதனை பொறுப்பு மிக்கவனாகவும், வெற்றியாளனாகவும் மாற்றும். குடும்பம் என்பது முக்கியமானது மட்டுமில்லை, அது எல்லாமுமானது ஆகும்.


Next Story