வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள்கள் விடிய, விடிய தர்ணா


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள்கள் விடிய, விடிய தர்ணா
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை திருத்த ஆவணங்களை வழங்கக்கோரி தாய், மகள்கள் விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை திருத்த ஆவணங்களை வழங்கக்கோரி தாய், மகள்கள் விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.

வீட்டுமனை பட்டாவில் திருத்தம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்பாக அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் மலைகன்னிகாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கலெக்டர் இதுகுறித்து விசாரித்த போது விஜயலட்சுமியின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவவீரர் ராமுவின் பூர்வீக வீட்டுமனை 300 சதுரமீட்டராகும். ஆனால் வீட்டுமனை பட்டாவில் 30 சதுரமீட்டர் என்று தவறுதலாக உள்ளது. எனவே வீட்டுமனையை அளவீடு செய்து அதனை திருத்தம் செய்துதர வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டார்.

இதையடுத்து கலெக்டர், வருவாய்துறையினரிடம் அந்த இடத்தை முழுஅளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையிலான வருவாய்துறையினர் அங்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுமனையை அளவீடு செய்தனர். இதுதொடர்பான விவரங்களை தரும்படி வருவாய்துறையினரிடம் விஜயலட்சுமி முறையிட்டார். அதற்கு அதிகாரிகள் விரைவில் முழுவிவரங்களையும் தருவதாக தெரிவித்தனர்.

விடிய, விடிய தர்ணா

இந்த நிலையில் 29-ந் தேதி இரவு வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு விஜயலட்சுமி தனது தாய் மற்றும் தங்கையுடன் வந்தார். வீட்டுமனை அளவீடு செய்த ஆவணங்களை தராமல் வருவாய்துறையினர் அலைக்கழிப்பதாக கூறி திடீரென அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சத்துவாச்சாரி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விஜயலட்சுமி வீட்டுமனை திருத்த ஆவணங்களை உடனடியாக தரவேண்டும். அதுவரை வீட்டுக்கு செல்ல மாட்டோம் என்று கூறினார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதையடுத்து விஜயலட்சுமி தனது தாய், தங்கையுடன் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் வருவாய்துறையினர் வீட்டுமனை திருத்த ஆவணங்களை ஓரிரு நாளில் தருவதாக 3 பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் அவர்களை மலைகன்னிகாபுரத்துக்கு அழைத்து சென்றனர்.


Next Story