உலக மூத்த குடிமக்கள் தினம்
1990-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி ‘உலக மூத்த குடிமக்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மூத்த குடிமக்களின் பங்களிப்பு முக்கியமானது. அறிவாற்றலும், செயல் திறனும் கொண்ட இளைய சமுதாயத்தை, தங்களின் அனுபவம் மற்றும் வழிகாட்டுதலால் நெறிப்படுத்தி, இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் மூத்த குடிமக்கள். அவர்களின் அனுபவப் பாடம்தான் நமது வாழ்வின் அடிப்படை நுணுக்கத்தை எளிதாக புரிய வைக்கிறது.
1990-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி 'உலக மூத்த குடிமக்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. வயதானவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலன் காத்தல், முதியவர்களுக்கான ஆதரவு, மரியாதை, பாராட்டு மற்றும் அவர்களின் சாதனையை அங்கீகரிப்பது போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
பெரியவர்களுடன் வளரும் குழந்தைக்கும், குடும்பத்துக்கும் சில சிறப்பு குணாதிசயங்களும், அணுகுமுறையும் இருக்கும். இந்த வாழ்வியல் முறை நம்மை அனைத்து கட்டங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும். வளரும் தலைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நம்மை வளர்த்த தலைமுறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதியவர்களைப் பாரமாக நினைக்காமல், நமக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்து செயல்படுவோம்.