வாழைப்பழ கிரேப் கேக்


வாழைப்பழ கிரேப் கேக்
x
தினத்தந்தி 23 May 2022 5:30 AM GMT (Updated: 23 May 2022 5:31 AM GMT)

இனிப்பு சுவைக் கொண்ட ‘வாழைப்பழ கிரேப் கேக்’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

'கிரேப்' என்பது பல மெல்லிய பான் கேக்குகளை ஒன்றாக அடுக்கி செய்யப்படும் கேக் வகையாகும். இது 13-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. கிரேப் கேக்கில் இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகைகள் உள்ளன. இதன் தனிப்பட்ட சுவையின் காரணமாக, உலகம் முழுவதும் இருக்கும் உணவுப் பிரியர்களின் விருப்ப உணவுகள் பட்டியலில், குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்துள்ளது. இனிப்பு சுவைக் கொண்ட 'வாழைப்பழ கிரேப் கேக்' எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 4

முட்டை - 2

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - ¼ தேக்கரண்டி

மைதா மாவு - 250 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

கோகோ பவுடர் - 5 கிராம்

கெட்டியாக காய்ச்சிய பால் - 250 மில்லி

பிரெஷ் கிரீம் - 250 மில்லி

சர்க்கரை - 25 கிராம்

சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவு

செய்முறை

நன்றாகப் பழுத்த 2 வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். மீதம் இருக்கும் வாழைப்பழத்தை சிறு சிறு வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், அரைத்த வாழைப்பழம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் கோகோ பவுடர், மைதா மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் கொட்டி சலித்துக்கொள்ளவும். இதை முட்டைக் கலவையில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும்.

பின்பு அந்தக் கலவையில் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும். அதனை மூடி, குளிர்சாதனப் பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.

பிறகு நான்-ஸ்டிக் தவாவில், சிறு சிறு அடைகளாக மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், சர்க்கரை சேர்த்து, எக் பீட்டர் கொண்டு கிரீம் பதத்திற்கு வரும் வரை 'பீட்' செய்யவும்.

வாழைப்பழ அடையின் மேல், தயார் செய்த பிரெஷ் கிரீமைத் தடவி அதன் மேல் வெட்டப்பட்ட வாழைப்பழத்தை வைக்கவும். பின்னர் மீண்டும் அதன் மேல் பிரெஷ் கிரீமைத் தடவவும். இதே போன்று, ஒன்றன் மீது ஒன்றாக வாழைப்பழ அடைகளை அடுக்கவும். பின்பு அந்த அடுக்கின் மீது உருக்கிய சாக்லேட் ஊற்றி அலங்கரிக்கவும். இப்பொழுது சுவையான 'பனானா கிரேப் கேக்' தயார்.


Next Story