மேங்கோ பட்டர் மசாலா


மேங்கோ பட்டர் மசாலா
x
தினத்தந்தி 24 July 2022 1:30 AM GMT (Updated: 24 July 2022 1:30 AM GMT)

புதுமையான, வித்தியாசமான ‘மேங்கோ பட்டர் மசாலா’ தயாரிப்பதற்கான குறிப்புகளை இங்கே காண்போம்.

'பழங்களின் ராணி' என்று அழைக்கப்படும் மாம்பழம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடியது. ஊறுகாய், லசி, அல்வா, பர்பி, சாக்லெட் என்று ஏராளமான உணவுகள் மாம்பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் புதுமையான, வித்தியாசமான 'மேங்கோ பட்டர் மசாலா' தயாரிப்பதற்கான குறிப்புகளை இங்கே காண்போம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழத்தை பொரிப்பதற்கு:

மாம்பழம் (விருப்பமான ரகம்) - 1

மைதா - ¼ கப்

சோள மாவு - ¼ கப்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

மசாலா தயாரிப்பதற்கு:

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 2

முந்திரி - 10

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு

இதர பொருட்கள்:

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்

தனியா மற்றும் சீரகப்பொடி தலா - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

கசூரி மேத்தி - சிறிதளவு

பிரஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், மைதா, சோளமாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கட்டியில்லாமல், தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதில், நறுக்கி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளைப் போட்டு, புரட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய்யை சூடாக்க வேண்டும். அதில் மாம்பழத் துண்டுகளைப் போட்டு, மேற்புறம் மட்டும் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும். இந்த மேல்மாவில் விரும்பினால், முட்டையின் வெள்ளைக் கருவையும் கலந்துகொள்ளலாம்.

பின்னர் அடுப்பில், மற்றொரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய் போட்டு, உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, முந்திரி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு ஆறியதும், சிறிதளவு தண்ணீர் விட்டு, பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் மீண்டும், வாணலியை வைத்து, அதில் வெண்ணெய் போட்டு, உருகியதும், காஷ்மீர் மிளகாய்த் தூள் கலந்து 30 விநாடிகள் வதக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா மற்றும் சீரகத்தூள், தேவையான உப்பு கலந்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.

5 நிமிடம் கழித்து, மசாலாவின் ஓரத்தில் வெண்ணெய் பிரிந்து வரும். அந்த சமயத்தில், பொரித்த மாம்பழத் துண்டுகளை அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்பு அதில் கசூரி மேத்தி, பிரஷ் கிரீம் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும். இப்போது சுவையான 'மேங்கோ பட்டர் மசாலா' ரெடி.


Next Story