விதவிதமான 'பால் கொழுக்கட்டை'


தினத்தந்தி 3 July 2022 1:30 AM GMT (Updated: 3 July 2022 1:30 AM GMT)

விதவிதமான ‘பால் கொழுக்கட்டை’ செய்முறைகள் குறித்து பார்ப்போம்.

தேங்காய் பால் கொழுக்கட்டை:

தேவையானப் பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

தேங்காய் - ¼ கப்

சர்க்கரை - 2 டீஸ்பூன்

வெல்லம் - ½ கப்

தேங்காய் பால் - ½ கப்

நெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

அரிசி மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்பு அந்த மாவில் பாதியை தனியாக எடுத்து வையுங்கள். மீதம் இருக்கும் மாவில் துருவிய தேங்காய், இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். வாணலியில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள். வெல்லம் நன்றாகக்கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளுங்கள்.

அதை மற்றொரு வாணலியில் ஊற்றி மீண்டும் சூடுபடுத்துங்கள். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வையுங்கள். 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி வையுங்கள். இப்போது 'பால் கொழுக்கட்டை' தயார்.

'அவல்' பால் கொழுக்கட்டை:

தேவையானப் பொருட்கள்:

அவல் மாவு - 1 கப்

பால் - 500 மி.லி

பாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

வெல்லம் - தேவைக்கு ஏற்ப

ஏலக்காய்த்தூள் - சிறிது

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும். 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் 'அவல் பால் கொழுக்கட்டை' தயார்.

வெல்லம் பால் கொழுக்கட்டை:

தேவையானப் பொருட்கள்:

எண்ணெய் - 3 டீஸ்பூன்

காய்ச்சிய பால் - 1 கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்

சுக்குப் பொடி - ½ டீஸ்பூன்

அரிசி மாவு - 1 கப்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

செய்முறை:

வாணலியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் சூடுபடுத்தவும். வெல்லம் முழுமையாகக் கரைந்த பின்பு வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைக்கவும்.

அரிசி மாவில் சிறிது எண்ணெய், உப்பு மற்றும் சூடான தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்கும் தண்ணீரில் மாவு உருண்டைகளை போட்டு பத்து நிமிடங்கள் வேக விடவும். அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அரிசி மாவு 1 டீஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்பு சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.


Next Story