குழந்தைகளுக்கான குளியல் பொடி


குழந்தைகளுக்கான குளியல் பொடி
x
தினத்தந்தி 14 Aug 2022 1:30 AM GMT (Updated: 14 Aug 2022 1:31 AM GMT)

குளியல் பொடி, குழந்தையின் மென்மையான சருமத்தை பூப்போல் பாதுகாக்கும். சருமப் பிரச்சினைகள் வராமல் தடுத்து, இயற்கையான நிறத்தை மெருகேற்றும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். ரசாயனம் கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தும்போது, சருமத்துக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சில தலைமுறைகள் வரை, பிறந்த குழந்தைகளின் சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள். மசாஜ் செய்வதற்கும், சருமப் பொலிவை அதிகரிப்பதற்கும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை உபயோகப்படுத்தினார்கள்.

இவை குழந்தையின் மென்மையான சருமத்தை பூப்போல் பாதுகாக்கும். சருமப் பிரச்சினைகள் வராமல் தடுத்து, இயற்கையான நிறத்தை மெருகேற்றும்.

இந்தக் குளியல் பொடி செய்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஜா இதழ்கள் - 100 கிராம்

ஆவாரம் பூ - 50 கிராம்

துளசி இலை - ஒரு கைப்பிடி

வேப்பிலைக் கொழுந்து - ஒரு கைப்பிடி

பச்சைப் பயறு - 300 கிராம்

சிவப்பு சந்தனம் - 50 கிராம்

பச்சரிசி - ஒரு கைப்பிடி

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் (ஆண் குழந்தையாக இருந்தால் இதைத் தவிர்க்கவும்)

தரமான பொருட்களை வாங்கவும். பூக்கள் மற்றும் இலைகளை தனித்தனியாக சுத்தப்படுத்தி நன்றாக உலர வைக்கவும்.

பச்சைப் பயறு மற்றும் கஸ்தூரி மஞ்சளை ஒரு மணி நேரம் வெயிலில் காயவைக்கவும். பின்னர் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அரவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொருட்களை அரைப்பதற்கு முன்பாக அரை கிலோ பச்சரிசியை கொடுத்து மாவாக அரையுங்கள். இயந்திரத்தில் இதற்கு முன்பு ஏதேனும் காரத்தன்மை கொண்ட பொருளை அரைத்திருந்தாலும் அல்லது அசுத்தங்கள் இருந்தாலும் நீங்கி குளியல் பொடி சுத்தமானதாக இருக்கும்.

இந்தப் பொடியை சலித்துப் பயன்படுத்துவது

நல்லது. பிறகு சுத்தமான காற்றுப் புகாத பெரிய பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைக்கவும். சிறிது பொடியை, சிறிய டப்பாவில் போட்டு தினசரி பயன்படுத்திக்கொள்ளலாம். 2 அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை அரைத்தால் போதும்.

பயன்படுத்தும் முறை:

சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வைக்கும் போது இந்தப் பொடியை நீரில் குழைத்துக் குழந்தையின் உடலில் தடவி, மென்மையாக கைகளால் தேய்த்துக் குளிக்க வைக்கலாம். முகத்துக்கும் பயன்படுத்தலாம். மசாஜ் செய்யாதபோதும் இதை நீரில் குழைத்துப் பயன்படுத்துங்கள்.

நன்மைகள்:

ரோஜா இதழ் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்.

பச்சைப் பயறு, பச்சரிசி ஆகியவை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையாக்கும்.

ஆவாரம் பூ, துளசி மற்றும் வேப்பிலை மூன்றும் கிருமிநாசினியாக செயல்படும்.

மஞ்சள், குழந்தையின் உடலில் இருக்கும் தேவையற்ற முடியை உதிரச் செய்யும்.

சிவப்பு சந்தனம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.


Next Story