அழகை அதிகரிக்கும் கிளிசரின்


அழகை அதிகரிக்கும் கிளிசரின்
x
தினத்தந்தி 5 Feb 2023 1:30 AM GMT (Updated: 5 Feb 2023 1:30 AM GMT)

சருமத்துக்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு சருமத்தின் மேல் அடுக்குகளில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் கிளிசரின் உதவும்.

ருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும் தன்மை கொண்டது கிளிசரின். சரும பராமரிப்புக்கான சோப், கிரீம் போன்றவற்றில் கிளிசரின் முக்கியமான மூலப் பொருளாக சேர்க்கப்படுகிறது. இதன் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

சருமத்தில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு கிளிசரின் சிறந்த தீர்வாகும். இது சருமத்தின் மீது மென்மையாக செயல்படும்.

தினந்தோறும் முகத்தில் கிளிசரின் தடவி வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் மறையும். வெடித்த நிலையில் இருக்கும் பருக்கள் மீது கிளிசரின் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.

கிளிசரின், சருமத்தின் மேல் அடுக்குக்கு ஈரப்பதத்தை வழங்கி, முகச் சுருக்கங்களைக் குறைக்க உதவும்.

லேசான தீக்காயங்கள் மீது கிளிசரின் தடவுவது அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை நீக்கி விரைவாக குணமாக்கும்.

கிளிசரின் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை பராமரிப்பதோடு மட்டுமில்லாமல் தீங்கு விளைவிக்கும் காரணிகள் சருமத்தை அண்டாமல் காக்கும். இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்திற்கு மென்மையான தோற்றத்தைத் தரும்.

சருமத்துக்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு சருமத்தின் மேல் அடுக்குகளில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் கிளிசரின் உதவும். இதன் புத்துணர்வூட்டும் பண்புகள் சருமத்தை பிரகாசமாகவும் வைத்திருக்கும்.

பலவகையான சரும பராமரிப்பு பொருட்களுடன் கிளிசரினை கலந்து பயன்படுத்த முடியும். இது சருமத்தின் துளைகளை அடைக்காமல் காக்கும்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் கிளிசரினை பயன்படுத்தும்போது, அது சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு தண்ணீரை 'டெர்மிஸ்' எனப்படும் சருமத்தின் இரண்டாவது அடுக்கில் இருந்து, மேல் அடுக்கு வரை கடத்தும். இதனால் சருமம் நீரேற்றத்துடன் காணப்படும்.

குளிர்காலங்களில் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு கிளிசரினை உபயோகிக்கலாம்.

எண்ணெய்ப்பசை அதிகம் கொண்ட சருமத்தினர் மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பதைத் தவிர்ப்பார்கள். இதனால் சருமம் எண்ணெய்யை அதிகமாக உற்பத்தி செய்யக்கூடும். இவர்கள் கிளிசரினை மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தலாம்.

ரோஜா பன்னீர் மற்றும் கிளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து தூய்மையான பருத்தித் துணியால் முகத்தை துடைத்தால், சுற்றுப்புற மாசு மற்றும் தூசியினால் முகத்தில் படியும் அழுக்கு முழுமையாக நீங்கும். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இவ்வாறு செய்தால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் அகற்றி விடலாம். முகப்பரு வருவதையும் தடுக்கலாம். மேக்கப்பை அகற்றவும் கிளிசரினைப் பயன்படுத்தலாம்.

கிளிசரினின் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்துக்கு மட்டுமில்லாமல், கூந்தல் பராமரிப்புக்கும் உதவும். இதை சிறிது தண்ணீருடன் கலந்து கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். தலைமுடிக்கு வண்ணம் பூசி இருப்பவர்கள், சிகை அலங்கார நிபுணரிடம் ஆலோசனைப் பெற்றபின்பு இதனை பயன்படுத்துவது நல்லது.


Next Story