புத்துணர்வு தரும் 'கப்பிங் தெரபி'


புத்துணர்வு தரும் கப்பிங் தெரபி
x
தினத்தந்தி 2 Oct 2022 1:30 AM GMT (Updated: 2022-10-02T07:00:36+05:30)

கப்பிங் சிகிச்சையில் டிரை கப்பிங், வெட் கப்பிங், பயர் கப்பிங், மேக்னட்டிக் கப்பிங், வாட்டர் கப்பிங், கிளைடிங் கப்பிங் என பல முறைகள் உள்ளன. இதில் அக்குபஞ்சர் ஊசிகள், மூலிகை இலைகள், தண்ணீர், மின்சார தூண்டல், லேசர் சிகிச்சை போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

ழங்காலத்தில் கையாளப்பட்ட மாற்று மருத்துவங்களில் ஒன்று 'கப்பிங் தெரபி'. இந்த சிகிச்சை முறை மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது. சருமத்தின் மீது சில கண்ணாடி கோப்பைகளை கவிழ்த்த நிலையில் அழுத்தி, காற்றை உறிஞ்சுதல் முறையில் கப்பிங் சிகிச்சை செய்யப்படுகிறது.

பண்டைய எகிப்து நாட்டில் தோன்றியதாக கூறப்படும் கப்பிங் சிகிச்சை முறை, சீனா, கொரியா மற்றும் திபெத் போன்ற நாடுகளிலும் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் கப்பிங் சிகிச்சை செய்யும்போது அங்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. தசைகளில் ஏற்படும் அழுத்தம் நீங்கி இயல்பாகிறது. பழுதடைந்த செல்கள் புத்துணர்வு பெற்று புதிய திசுக்களும், ரத்த நாளங்களும் உருவாகின்றது.

ஒவ்வாமை, மன அழுத்தம், மனச் சோர்வு, ரத்த அழுத்தம், முதுகு வலி, தலைவலி, ஒற்றைத் தலைவலி, முழங்கால் வலி, தசைகளில் ஏற்படும் வலிகள், கழுத்து மற்றும் தோள்பட்டை வலி, செரிமானக் கோளாறு, ரத்த சோகை, ஆஸ்துமா அல்லது சளியால் மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு கப்பிங் சிகிச்சை தீர்வளிக்கிறது.

முகத்திலும் கப்பிங் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு, 'பேஷியல் கப்பிங் தெரபி' என்று பெயர். இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, பருக்களை அகற்றி, முகப் பொலிவை அதிகரிக்கும்.

பழங்காலத்தில் கப்பிங் சிகிச்சையில் கோப்பைகளுக்கு பதிலாக, விலங்குகளின் கொம்புகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் மூங்கிலால் தயாரிக்கப்படும் கப்புகள் உபயோகிக்கப்படுகின்றன.

கப்பிங் சிகிச்சையில் டிரை கப்பிங், வெட் கப்பிங், பயர் கப்பிங், மேக்னட்டிக் கப்பிங், வாட்டர் கப்பிங், கிளைடிங் கப்பிங் என பல முறைகள் உள்ளன. இதில் அக்குபஞ்சர் ஊசிகள், மூலிகை இலைகள், தண்ணீர், மின்சார தூண்டல், லேசர் சிகிச்சை போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

பேஷியல் கப்பிங், ஸ்போர்ட்ஸ் கப்பிங், ஆர்த்தோபீடிக் கப்பிங், அக்குவாட்டிக் கப்பிங் என இதில் சில வகைகள் உள்ளன. மார்பு, வயிறு, முதுகுப்பகுதி, கால்கள் போன்ற இடங்களில் பெரும்பாலும் கப்பிங் சிகிச்சை செய்யப்படுகிறது.

கப்பிங் சிகிச்சையில் மூலிகைகள் அல்லது காகிதம் எரிக்கப்பட்டு கப்புகளுக்குள் வைக்கப்படுகிறது. சூடானபின் உள்ளிருக்கும் காகிதம் அகற்றப்பட்டு கப்புகள் சருமத்தின் மீது கவிழ்த்து வைக்கப்படுகிறது. கப்பின் உள்ளே உள்ள காற்று குளிர்ந்து தோலையும், தசையையும் கப்புக்குள் இழுத்து வெற்றிடத்தை உருவாக்குகிறது. இந்த செயல்பாட்டின்போது ரத்தநாளங்கள் அழுத்தப்படுவதால் தோல் சிவப்பு நிறமாக மாறலாம். இவ்வாறு சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம் 5 முதல் 7 நாட்களுக்குள் மறைந்துவிடும்.

ரத்தம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று கப்பிங் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.


Next Story