புருவத்தை சீர்படுத்தும் முன்பு கவனிக்க வேண்டியவை
ஹார்மோன் பிரச்சினை இருப்பவர்களுக்கு சீக்கிரம் முடி வளர்ந்து விடும். அவர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை ‘திரெட்டிங்’ செய்துகொள்ளலாம்.
புருவங்கள் பெண்களின் முக வடிவத்தை மெருகூட்டி காட்டுபவை. இயற்கையாக வளர்ந்திருக்கும் புருவ முடிகளை சரியான முறையில் சீர்படுத்தினால் முகத்தின் அழகு அதிகரிக்கும்.
இதற்காக பல பெண்கள் 'திரெட்டிங்' எனும் முறையை கையாள்கிறார்கள். மெழுகு தடவிய மெல்லிய நூலைக்கொண்டு புருவ முடிகளை சீர்படுத்தும் முறையே 'திரெட்டிங்'. இது பாதுகாப்பானதா? இதை யாரெல்லாம் செய்து கொள்ளலாம்? என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 'திரெட்டிங்' நூலைக்கொண்டு புருவ முடிகளை இழுக்கும்போது கண் நரம்புகள் பாதிக்கப்படலாம். சருமத்தின் மெல்லிய அடுக்குகள் மற்றும் முடியின் வேர்க்கால்கள் சேதம் அடையலாம். எனவே 18 வயதைக் கடந்த பிறகு 'திரெட்டிங்' செய்து கொள்வதே பாதுகாப்பானது.
கர்ப்பிணிகள், முதல் 7 மாதங்கள் வரை 'திரெட்டிங்' செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பக்காலத்தில் ஹார்மோன் மாற்றம் காரணமாக முடியின் வேர்க்கால்கள் வலுவிழக்கலாம். எனவே அவற்றுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
ஒருமுறை 'திரெட்டிங்' மூலம் புருவங்களை சீர்செய்த பிறகு, மீண்டும் செய்வதற்கான இடைவெளி என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். 1 முதல் 1½ மாதங்கள் வரை இடைவெளி இருப்பது நல்லது. முடி நன்றாக வளர்ந்த பிறகு 'திரெட்டிங்' செய்வதே சிறந்தது. ஹார்மோன் பிரச்சினை இருப்பவர்களுக்கு சீக்கிரம் முடி வளர்ந்து விடும். அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை 'திரெட்டிங்' செய்துகொள்ளலாம்.
முக வடிவத்துக்கு தகுந்தது போல புருவங்களை சீரமைக்க வேண்டும். வட்டமான முக அமைப்பு கொண்டவர்களுக்கு, புருவங்களை சற்று மேலே தூக்கி பின்பு கீழே இறக்கியவாறு வடிவமைத்தால் அழகாக இருக்கும். நீள்வட்ட முகத்திற்கு புருவங்கள் வளைவாக இருப்பது கூடுதல் அழகு சேர்க்கும்.
புருவங்களில் முடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு 'ஐ ப்ரோ' பென்சிலை ஆமணக்கு எண்ணெய்யில் தோய்த்து புருவத்தில் தீட்டிக்கொள்ளலாம். இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து காலையில் முகம் கழுவி வந்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
'திரெட்டிங்' செய்யும் போது புருவத்தை மெல்லியதாக மாற்றக்கூடாது. அதனால் முகத்தின் இயல்பான அழகு குறையும். மேலும் முழுதாக முடி வளர 6 முதல் ஒரு வருடம் வரை ஆகும். எனவே அதிகப்படியான முடியை மட்டும் நீக்க வேண்டும்.
மற்றவரின் புருவங்களைப் பார்த்து அதைப்போல உங்களுக்கும் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். உங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவ வடிவம் பொருந்தும் என்பதை அழகுக்கலை நிபுணர்களால் கூறமுடியும். எனவே அவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.