குழந்தைகளுக்கான பிறந்தநாள் பரிசுகள்


குழந்தைகளுக்கான பிறந்தநாள் பரிசுகள்
x
தினத்தந்தி 1 Jan 2023 1:30 AM GMT (Updated: 1 Jan 2023 1:30 AM GMT)

ஒரு குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் இருக்கிறதோ, அதில் அவர்கள் சிறந்து செயல்பட உதவும் பரிசைக் கொடுங்கள்.

ரிசுப் பொருட்களை விரும்பாத குழந்தைகள் கிடையாது. சிறுவயதில், நமக்கு மிகவும் பிடித்த பொருள் பரிசாகக் கிடைத்தால், அதை அத்தனை பாதுகாப்பாய் வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்து மகிழ்ந்திருப்போம். இந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் இன்றைய குழந்தைகளிடமும் இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும், தனக்குக் கிடைக்கப்போகும் பிறந்த நாள் பரிசை ஆவலோடு எதிர்பார்க்கும். அவ்வாறு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளின் குழந்தைகளுடைய பிறந்த நாளுக்கு, ஒரு நல்ல பரிசை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இதோ சில ஆலோசனைகள்.

நீங்கள் பரிசு கொடுக்கப்போகும் குழந்தையின் தேவை என்ன என்பதை கண்டுபிடியுங்கள். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு பேனா தேவைப்படலாம். ஒரு குழந்தைக்கு அழகான புத்தகப்பை, இன்னொரு குழந்தைக்கு பரீட்சைக்கான எழுத்து அட்டை.

இவ்வாறு தேவை அறிந்து பரிசு கொடுத்தால் பயனுள்ளதாகவும், மனதில் நிற்பதாகவும் இருக்கும்.

அடுத்தபடியாக நீங்கள் கொடுக்கும் பரிசு, வயதுக்கு மீறியதாக இருக்கக்கூடாது. உதாரணத்துக்கு டீனேஜ் பருவ பிள்ளைகளுக்கு மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ் எல்லாமே வயதுக்கு மீறிய விஷயம். ஒவ்வொரு குழந்தைக்கும் எது வயதுக்கு மீறியது என்பது மாறுபடும். அதை உணர்ந்து கொடுங்கள்.

நீங்கள் கொடுக்கப்போகும் பரிசு, குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் இணைந்து உபயோகிக்கும் வகையில் இருந்தால் சிறப்பு. உதாரணமாக, வரைவதற்கு தேவையான வண்ணங்கள் - பிரஷ், அதற்கான நோட்டு புத்தகங்கள், கைகளால் தொட்டு விளையாடும் 'க்ளே' போன்றவற்றை கொடுக்கலாம். இல்லையென்றால், செடிகள் கொடுக்கலாம். இது குழந்தைகளை இயந்திரமாக்காமல் காக்கும். அவர்கள் தங்கள் பெற்றோருடன் நேரம் செலவிடவும் உதவும்.

ஒரு குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் இருக்கிறதோ, அதில் அவர்கள் சிறந்து செயல்பட உதவும் பரிசைக் கொடுங்கள். உதாரணமாக, இசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இசைக்கருவிகள்; விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள்; கம்ப்யூட்டரில் கோடிங் மாதிரி நவீன விஷயங்களில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு அதுதொடர்பான புத்தகங்களைக் கொடுக்கலாம்.

புகைப்பட ஆல்பங்கள் எப்போதுமே குழந்தைகளுக்கு ஒரு இனிய அனுபவம்தான். ஒரு புகைப்படத்தை தொட்டுப்பார்த்து அந்த நொடியை உணர்வதை, எந்த டிஜிட்டல் சாதனமும் கொடுத்திடாது. இந்த தலைமுறை குழந்தைகள், அந்த உணர்வை பெறுவது சொற்ப நேரங்களில்தான். ஆகவே, குழந்தைகளுக்கு அவர்களின் புகைப்படங்களை இணைத்து ஆல்பமாக போட்டுக் கொடுப்பது சிறந்த பரிசாக அமையும்!

பரிசு பொருட்கள் பேக் செய்வதில் புதுமை

குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசுப் பொருட்களை பேக் செய்யும் விதத்திலும், அவர்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்த முடியும்.

வெள்ளைத் தாளில் பரிசுப் பொருளை பேக் செய்து, வண்ணம் தீட்டும் பென்சில்களை அதில் இணைத்து, அவர்களே வண்ணம் தீட்டும் விதத்தில் கொடுக்கலாம். கேக் துண்டு வடிவத்தில் பரிசுப் பொருளை பேக் செய்து, அதில் சிறு மெழுகுவர்த்தியும் இணைக்கலாம். பரிசுப்பொருள் பேக் செய்த பார்சலையே, உங்கள் கற்பனைக்கு ஏற்ற விதத்தில் ஏதாவது ஒரு விலங்கு, காய்கறி மற்றும் பழங்கள் உருவத்தில் மாற்றி அமைக்கலாம். குழந்தைகள் இதை மிகவும் விரும்புவார்கள்.


Next Story