ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கினர்ஜி தெரபி


ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கினர்ஜி தெரபி
x
தினத்தந்தி 26 Feb 2023 1:30 AM GMT (Updated: 26 Feb 2023 1:30 AM GMT)

ஆழ்மனதில் பதிந்து வைத்திருக்கும் மன அழுத்தத்தை நீக்கவும், உடலின் இயற்கையான குணப்படுத்தும் ஆற்றலை மேம்படுத்தவும், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அதிகபட்ச திறனை அடையவும் ‘கினர்ஜி தெரபி’ சிகிச்சை உதவுகிறது.

ருந்து, மாத்திரைகள் இல்லாமல் ஒருவரின் கோபம், வருத்தம், சோர்வு, கவலை உள்ளிட்ட உணர்ச்சி ஆற்றல்களை குணப்படுத்த உதவும் சிகிச்சை முறையே 'கினர்ஜி தெரபி'. இந்த துறையில் கோவையைச் சேர்ந்த பிசியோதெரபி நிபுணர் கலைவாணி, பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். அவர் இது குறித்து கூறுவது…

"கினர்ஜி தெரபி என்பது ஒருவரது வாழ்க்கையின் கடந்தகால அனுபவங்களின் மூலம் உணர்வுகளில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி, சிந்தனை அமைப்பை சீர்படுத்தி, உடலின் ஆற்றல் புலங்கள், உறுப்புகள், சுரப்பிகள் அல்லது ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்ட நினைவுகளில் உள்ள பாதிப்பை குணப்படுத்தும் சிகிச்சை முறை ஆகும்.

உங்களுடைய தற்போதைய யதார்த்த வாழ்க்கை நிலை என்பது உங்கள் சிந்தனை, செயல்முறைகள், கருத்து மற்றும் நம்பிக்கை போன்றவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்களுடைய குழந்தைப் பருவ வளர்ப்பு, உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுத்த விஷயங்கள், உங்களைச் சுற்றி நடக்கும் வாழ்வியல் மாற்றம் மற்றும் பல நடவடிக்கைகளின் அடிப்படையில் உருவாகிறது.

எளிதாக கூறவேண்டுமென்றால், ஒரு உறவுக்குள் ஏற்படும் பிரச்சினைக்கு அடிப்படை காரணம், நாம் முன்னதாகவே அதனை குறித்து தீர்மானித்து செய்யும் 'பிரீ ஜட்ஜ்மெண்டல்' செயல்கள்தான். ஒருவர் வளர்ந்த விதம் மற்றும் அவரை வாழ்வில் மெருகேற்றிய சில வளர்ப்பு முறைகளே இவ்வாறு அவர் சிந்திக்க காரணமாக அமைகின்றன. அதேபோல் பயம், கோபம், பதற்றம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு போன்ற உணர்ச்சிகளாலும் 'பிரீ ஜட்ஜ்மெண்டல்' நிலைக்கு ஆளாவோம்.

இவ்வாறு செல்லுலார் முதல் ஆன்மிக நிலை வரை உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, மிக நுண்ணிய நினைவுகளை அகற்றுவதன் மூலம் இயற்கையாகவே இதனை குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்க முடியும்.

ஆழ்மனதில் பதிந்து வைத்திருக்கும் மன அழுத்தத்தை நீக்கவும், உடலின் இயற்கையான குணப்படுத்தும் ஆற்றலை மேம்படுத்தவும், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அதிகபட்ச திறனை அடையவும் 'கினர்ஜி தெரபி' சிகிச்சை உதவுகிறது.

சிகிச்சை மேற்கொள்பவர், நிபுணர் மற்றும் ஆன்மா இம்மூவரையும் இணைக்கும் ஒரு வட்டத்தின் அடிப்படையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது நம் ஆழ்மனதில் பதிந்துள்ள உணர்ச்சிகளை நம்மால் அறிந்துகொள்ள முடிவதுடன், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வதற்கான வழிகளையும் மேற்கொள்ள முடியும்.

கினர்ஜி தெரபியின் பலன்கள்:

மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை தடுக்கும் முக்கிய சிக்கல்களை வெளிக்கொண்டுவர உதவும். சொந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும். மகிழ்ச்சி மற்றும் மனநிறைவின் அனுபவத்தைத் தூண்டி, அதை உணர வழிவகுக்கும்.


Next Story