பருவ காலத்திற்கு ஏற்ற ஆடைகள் பராமரிப்பு


பருவ காலத்திற்கு ஏற்ற ஆடைகள் பராமரிப்பு
x
தினத்தந்தி 7 May 2023 1:30 AM GMT (Updated: 7 May 2023 1:30 AM GMT)

துணிகளை அடுக்கி வைப்பதற்கு அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவற்றில் கரப்பான்பூச்சிகள் எளிதாக பெருகும். அவை ஆடைகளை சேதப்படுத்தக்கூடும்.

ழை, வெயில் என்று ஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஏற்ற வகையில் நாம் அணியும் ஆடைகளும் வேறுபடும். ஒரு பருவகாலம் முடிந்து மற்றொன்று தொடங்கும்போது, அதற்கு முன்பு நாம் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் இதர பொருட்களை பாதுகாப்பான முறையில் பராமரிப்பது அவசியம்.

முதலில் உங்களுடைய அலமாரியில் இருந்து கோடை காலத்தில் உபயோகப்படுத்த முடியாத ஆடைகளை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். குளிர்கால ஆடை வகைகளான ஸ்வெட்டர், கோட் போன்றவை தற்போது உங்களுக்கு தேவைப்படாது. நீண்ட கைகள் கொண்ட பிளவுஸ், காலர் கொண்ட குர்த்தி வகைகளை கோடையில் அணிய முடியாது. போர்வை, மப்ளர் போன்றவையும் கோடையில் தேவைப்படாது.

கம்பளி ஆடைகள், போர்வைகள் போன்றவற்றை நேர்த்தியாக மடித்து நீங்கள் உபயோகிக்காத சூட்கேஸ்களில் அடுக்கி பரணில் வைக்கலாம். அதனுள் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஒரு தாளில் எழுதி அதை சூட்கேஸ் மீது ஒட்டுங்கள். அப்போதுதான் பின்னாளில் எளிதாக தேடி எடுக்க முடியும். மற்ற துணிகளை அழகாக மடித்து அடுக்கி வையுங்கள்.

இடத்தை அடைக்காமல் எளிதாக அடுக்கி வைக்கும் வகையில் வாக்குவம் பைகள் கிடைக்கின்றன. அவற்றில் துணிகளை வைக்கலாம். ஈரப்பதமில்லாத இடத்தில் அவற்றை வைத்து பாதுகாப்பது முக்கியம். இந்த பைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து காற்றில் உலர வைத்தால், அதன் உள்ளே இருக்கும் துணிகளில் எவ்விதமான வாடையும் வீசாது.

துணிகளை அடுக்கி வைப்பதற்கு அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவற்றில் கரப்பான்பூச்சிகள் எளிதாக பெருகும். அவை ஆடைகளை சேதப்படுத்தக்கூடும். துணிகளை அடுக்கி வைக்கும் முன்பு அவை சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

வெயில் காலத்தில் ஜார்ஜெட் போன்ற செயற்கை இழைகளால் ஆன உடைகள், அடர்ந்த நிறங்களைக் கொண்ட உடைகளைத் தவிர்ப்பது நல்லது. அவை சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகையால் அவற்றையும் தனியே எடுத்து வையுங்கள்.

மஞ்சள், ஆரஞ்சு நிற திரைச்சீலைகள் ஒளியை அதிகரித்துக் காட்டும் என்பதால் இவற்றை குளிர்காலத்தில் உபயோகிக்கலாம். ஆனால், கோடை காலத்தில் இந்த திரைசீலைகள் அறையின் வெப்பத்தை அதிகரிக்க செய்துவிடக்கூடும்.

கோடையில் துணிகளைத் துவைத்த பின்பு நேரடி சூரிய ஒளியில் உலர வைத்தால் நிறங்கள் மங்கக்கூடும். எனவே நிழலில் உலர்த்துங்கள்.


Next Story