ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை கையாளும் வழிகள்


ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை கையாளும் வழிகள்
x
தினத்தந்தி 16 July 2023 1:30 AM GMT (Updated: 16 July 2023 1:30 AM GMT)

வங்கிக்கணக்குகளை உங்கள் செலவுகளுக்கு ஏற்றவாறு பிரித்துக் கையாள்வது சிறந்தது. அன்றாட செலவுகளுக்கு ஒரு கணக்கையும், மாதத் தவணை பிடிப்புகளுக்கு வேறு கணக்கையும் பயன்படுத்தலாம்.

ணியிடத்தில் சம்பளக் கணக்காகவும், தனிப்பட்ட தேவைகளுக்காகவும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் சூழல் இருக்கிறதா? அவற்றை சரியான முறையில் கையாளும் வழிகள் இதோ…

முதலில் உங்களுடைய அனைத்து வங்கிக் கணக்குகளையும் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் அவற்றை திறமையாக நிர்வகிக்க முடியும். மொபைல் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங் போன்ற அம்சங்களுக்கான உள்நுழைவு விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களை வரிசைப்படுத்தி எழுதி வையுங்கள். இதனால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

ஒவ்வொரு வங்கிக்கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய வரம்பு இருக்கும். அவ்வாறு பராமரிக்கத் தவறினால் அதற்கு அபராதமாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை கழித்துக்கொள்வார்கள். இதனால் தேவையற்ற பண விரயம் உண்டாகும்.

உங்கள் சம்பளக் கணக்கிற்காக, நீங்கள் வழக்கமாக கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தவிர்த்து புதிய வங்கியில் கணக்கு தொடங்க நேரிடலாம். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் தேவை பாதிக்கப்படாத வகையில் இரண்டு வங்கிக் கணக்குகளையும் சீராக பராமரிக்க வேண்டும். நீங்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இருந்து விலக நேரிட்டால், அதற்கான வங்கிக் கணக்கை முறையாக முடித்துவிட வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகளை நிர்வகிக்கும்போது, எந்த வங்கியில் அதிக பலன் தரும் சேவைகள் உள்ளதோ அந்தக் கணக்கை முதன்மையாகவும், மற்றவற்றை குறைவான தேவைக்காகவும் பயன்படுத்த வேண்டும். இதில் குறைந்த வரம்புத் தொகை, குறைந்த சேவைக்கட்டணம், அதிக வட்டி போன்ற காரணிகளை கவனிக்க வேண்டியது அவசியம்.

வங்கிக்கணக்குகளை உங்கள் செலவுகளுக்கு ஏற்றவாறு பிரித்துக் கையாள்வது சிறந்தது. அன்றாட செலவுகளுக்கு ஒரு கணக்கையும், மாதத் தவணை பிடிப்புகளுக்கு வேறு கணக்கையும் பயன்படுத்தலாம். அடிக்கடி பணம் எடுக்கும் தேவை இருந்தால் அதற்கு குறைந்த சேவைக்கட்டணம் கொண்ட வங்கிக் கணக்கை உபயோகிக்கலாம்.

குழந்தைகளின் கல்விக்கான சேமிப்பு, அவசரகால நிதி, பயணத்துக்கான சேமிப்பு போன்றவற்றுக்கு தனித்தனி வங்கிக் கணக்குகளை பயன்படுத்தலாம். இதன்மூலம் அவற்றை சரியான முறையில் கண்காணிப்பது எளிதாக இருக்கும்.


Next Story