இ-காமர்ஸ் வர்த்தகத்தில் கலக்கும் பட்டதாரி மாணவி
எனது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், எனக்கு ஏதாவது தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை செயல்படுத்த முயன்றபோது, எதை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.
"வீட்டில் இருந்தே தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ஏற்றது, இ-காமர்ஸ் வர்த்தகம். இதன் மூலம் மாதம் 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்" என்கிறார் மேனகா.
இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். முதுகலை மைக்ரோ பயாலஜி முடித்துவிட்டு, தொலைதூரக் கல்வி மூலம் எம்.பி.ஏ., படித்து வருகிறார். அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்தைச் சேர்ந்த மேனகா, இ-காமர்ஸ் வர்த்தகத்தின் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
அவரைச் சந்தித்தபோது…
இ-காமர்ஸ் வர்த்தகத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
எனது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், எனக்கு ஏதாவது தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை செயல்படுத்த முயன்றபோது, எதை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து தேடியபோது, இ-காமர்ஸ் பற்றிய தமிழ் யூ-டியூப் சேனலைப் பார்த்தேன். அதில் ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் பொருட்களை விற்பனை செய்வது பற்றிய விபரங்களை தெரிவித்திருந்தார்கள்.
அந்த ஆலோசனை எனக்குப் பிடித்ததால், இ-காமர்ஸ் பற்றிய பல விஷயங்களை இணையத்தில் தேடி தெரிந்து கொண்டேன். அதன் பின்னர், இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்களை ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் விற்பனை செய்ய முடிவெடுத்தேன்.
இ-காமர்ஸ் வர்த்தகம் தொடங்க அதிக முதலீடு செய்ய வேண்டுமா?
12-ம் வகுப்பு படித்தபோது அரசு கொடுத்த இலவச மடிக்கணினி தான் எனது இ-காமர்ஸ் தொழிலுக்கான முதல் முதலீடு. எங்கள் ஊருக்குப் பேருந்து வசதி குறைவு. ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளருக்கு தருவதற்கான ரசீதை பிரிண்ட் அவுட் எடுக்க 4 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியது இருந்தது. அதனால் சிறிய பிரிண்டர் ஒன்றை வாங்கினேன்.
இ-காமர்ஸ் வர்த்தகத்தில் குறைந்த அளவிலான முதலீடே போதுமானது. இதற்கு பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. விற்பனையான பொருட்களுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். விற்பனை செய்யும் பொருட்களை அதிக அளவில் இருப்பு வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவ்வப்போது மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கிக்கொள்ளலாம். வருகின்ற ஆர்டர்களை சரி பார்த்து அனுப்புவதற்கு, இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் தேவைப்படும். வீட்டிலேயே பிரிண்டர் மற்றும் மடிக்கணினி வைத்திருந்தால் குறைந்த முதலீடு செய்தாலே போதுமானது.
இ-காமர்ஸ் வர்த்தகம் மூலம் எந்தெந்தப் பொருட்களை விற்பனை செய்கிறீர்கள்?
இயற்கை விவசாயத்திற்குத் தேவையான, ரசாயன கலப்படம் இல்லாத பூச்சிக்கொல்லிகள், உரங்கள், நுண்ணுயிர் ஊக்கிகள் உள்ளிட்ட 13 வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இவற்றை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகமாக வாங்குகிறார்கள். பேக்கேஜிங், ஆன்லைன் தளத்திற்கான கட்டணம், டெலிவரி கட்டணம் போன்றவற்றுக்காக மட்டும் சிறு தொகையை செலவிட வேண்டும்.
வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர்களை எவ்வாறு பெறுகிறீர்கள்?
இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஒரு தளத்தில் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. அனைத்து தளங்களிலும் விற்பனை செய்யலாம். ஒவ்வொரு தளத்திலும் பொருட்களை டெலிவரி செய்யும் முறை ஒரே மாதிரியானதுதான். விற்பனை செய்யும் பொருட்களை, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்திருக்கிறார்களா? என்று சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்தில், விற்பனையாளர்களுக்கான தனிப்பட்ட செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அதன் பின்னர் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களின் தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் இருப்பிட தூரத்தைக் கணக்கிட்டுப் பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்து, அதே ஆப்பில் இருக்கும் வசதியைப் பயன்படுத்தி பொருளின் அளவு, எடை, விலை போன்ற தகவல்களைக் கொடுத்து ரசீதை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்ட வேண்டும். பின்பு, ஆன்லைன் வர்த்தகத் தளத்தின் ஊழியர்கள் வந்து வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வதற்காகப் பெற்றுக்கொள்வார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட முடியுமா?
வீட்டில் இருந்தே பணியாற்றுபவர்கள், இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல் வேலைக்குச் செல்லும் பெண்களும் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், விற்பனையாளர்களிடம் இருந்து மொத்தமாகப் பொருட்களை வாங்கிக்கொள்கின்றன. அந்த பொருட்கள் சம்பந்தமான ஆர்டர், டெலிவரி, பேக்கிங் போன்ற அனைத்து விஷயங்களையும் அந்த நிறுவனங்களே செய்கின்றன. பொருட்கள் விற்பனையானதும் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக எடுத்துக்கொண்டு, மீதித்தொகையை விற்பனையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்துகின்றன.
இந்த முறை, குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ள இல்லத்தரசிகள், கூடுதல் வருமானம் தேவைப்படும் பெண்கள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்கள் கவனத்திற்கு...
குறைந்த முதலீட்டில் அதிக லாபம், வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு வசதியான நேரத்தில் வேலை செய்வது போன்ற பல காரணங்களால் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில், இந்த வர்த்தகத்தில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பதும் முக்கியம். புதிதாக இ-காமர்ஸ் வர்த்தகத்தில் நுழைய நினைக்கும் பெண்கள், எதையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
இ-காமர்ஸ் வர்த்தகத்தில் எத்தகைய பொருட்களை விற்பனை செய்யப்போகிறீர்கள், உங்களுக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் யார், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு அனுப்புவது, வாங்கப்படாமல் திரும்பி வரும் பொருட்களை எவ்வாறு கையாள்வது, விற்பனை செய்யும் பொருட்களின் விலை, உங்களுக்கான லாபம் ஆகியவற்றை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
தனியாக ஆன்லைன் விற்பனைத்தளம் தொடங்க நினைப்பவர்கள், உங்கள் தளத்துக்கான பெயர், வர்த்தகத்துக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் குழுவினர், வடிவமைப்பு, விளம்பரப்படுத்துதல் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.