ஆஸ்திரேலியாவில் அசத்தும் அனுதீபா


ஆஸ்திரேலியாவில் அசத்தும் அனுதீபா
x
தினத்தந்தி 9 July 2023 1:30 AM GMT (Updated: 9 July 2023 1:31 AM GMT)

கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. ஆஸ்திரேலியாவில் தமிழ் கலாசார நிகழ்வுகளுக்கு மதிப்பு கொடுக்கின்றனர். அங்குள்ள பலரின் வீட்டிலும் நான் வரைந்த தமிழ்க் கடவுள்களின் புகைப்படங்களை பார்க்க முடிகிறது.

ந்திய கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் தன்னுடைய ஓவியங்கள் மூலமாக ஆஸ்திரேலிய நாட்டில் பரப்பி வருகிறார் அனுதீபா. திருப்பூரில் பிறந்த இவர், தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார். ஓவியங்கள் வரைவது, கலைப்பொருட்கள் தயாரிப்பது என பன்முக திறமைகளைக் கொண்டவராக விளங்குகிறார். ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம், வர்த்தக நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கலைப்பொருள் சார்ந்த இலவச கண்காட்சிகளை நடத்தி இருக்கிறார். தன்னுடைய திறமைகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். அவருடன் நடந்த உரையாடல்...

ஓவியங்கள் மீது உங்களுக்கு உள்ள ஈடுபாடு பற்றி சொல்லுங்கள்?

திருமணத்திற்குப் பிறகு என்னுடைய கணவர் கதிரேசனின் பணி நிமித்தமாக 2004-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தோம். அங்குதான் என்னுடைய தனிப்பட்ட முயற்சியின் மூலம் ஓவியம் வரைய கற்றுக் கொண்டேன். மெல்போர்ன் நகரில் இருக்கும் புகழ்வாய்ந்த ஒரு நூலகத்துக்கு தினந்தோறும் சென்று ஓவியக்கலை தொடர்பான புத்தகங்களைத் தேடி எடுத்துப் படித்தேன். முதலில் இயற்கைக் காட்சிகள், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் படங்கள் ஆகியவற்றை வரைந்தேன். அது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அடுத்த கட்டத்ைத நோக்கி பயணிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்தேன். உருவ ஓவியங்கள் வரையவும் கற்றுத் தேர்ந்தேன்.

அடுத்ததாக, தெய்வங்களின் உருவங்களை வரைந்தேன். அதற்கு நான் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது. நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக என்னுடைய ஓவியங்கள் பிரபலம் அடைந்தன. கோவில் முன் மண்டபம், வீட்டு பூஜையறை, தமிழ்க் கல்வி கூடங்கள் ஆகியவற்றில் வைப்பதற்கு நான் வரைந்த சிவன், அம்மன், சரஸ்வதி, ஐயப்பன், முருகப்பெருமான் போன்ற தெய்வங்களின் படங்களை விரும்பிக் கேட்டனர். அவற்றை வித்தியாசமாகவும், ஆகம விதிப்படியும் வரைய வேண்டும் என்பதற்காக நான்கு மாதங்கள் சிற்ப சாஸ்திரம் படித்தேன். இவ்வாறு பென்சில் ஓவியம் முதல் கலம்காரி ஓவியங்கள் வரை கற்றுக் கொண்டேன். அலுமினியத்தில் உருவங்களை செதுக்குவது, களிமண் கொண்டு நகைகள் தயாரிப்பது போன்ற கலைகளும் எனது விருப்பத்துக்குரியதாகும்.

தமிழ் கலாசாரம் சார்ந்த கலை கண்காட்சிக்கு ஆஸ்திரேலியாவில் வரவேற்பு உள்ளதா?

கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. ஆஸ்திரேலியாவில் தமிழ் கலாசார நிகழ்வுகளுக்கு மதிப்பு கொடுக்கின்றனர். அங்குள்ள பலரின் வீட்டிலும் நான் வரைந்த தமிழ்க் கடவுள்களின் புகைப்படங்களை பார்க்க முடிகிறது. இந்த வருட பொங்கல் திருநாளன்று 'அறுவடைத் தாய்' என்ற பெயரில், பச்சை சேலை உடுத்திய அம்மன் உருவத்தை வயல்வெளியில் நிற்பதுபோல உருவாக்கி கண்காட்சியில் வைத்திருந்தேன். அதைப் பலரும் பார்த்து ரசித்தனர்.

என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியில் அர்த்தநாரீஸ்வரர் ஓவியம் வரைந்திருந்தேன். அதற்கு சிறந்த ஓவியப் படைப்பு விருது கிடைத்தது. மேலும் புவிவெப்பமயமாதல், சிட்டுக்குருவி இனத்தை பாதுகாத்தல், இயற்கை வேளாண்மை, சுற்றுப்புறத் தூய்மை உள்பட பல்வேறு தலைப்புகளில் ஓவியங்கள் வரைந்து 'சிறந்த ஓவியக் கலைஞர்' விருது பெற்றிருக்கிறேன். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலைப் பொருட்களை நானே வழங்கி இலவசமாக இரண்டு மணி நேரம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பயிற்சி அளித்தேன். இந்த ஆண்டு உள்ளூர் கலை சார்ந்த நூலகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப் போகிறேன்.


Next Story