ஆடு மேய்க்கும் பாரதியின் காடு வளர்க்கும் சேவை


ஆடு மேய்க்கும் பாரதியின் காடு வளர்க்கும் சேவை
x
தினத்தந்தி 4 Jun 2023 1:30 AM GMT (Updated: 4 Jun 2023 1:30 AM GMT)

மரங்களுக்கும் உணர்வு உண்டு. உன் கை ரேகை பதிந்த விதைகள் முளைத்து மரமான பின்பு நீ என்றாவது அந்த வழியில் சென்றால், அவை மகிழ்ச்சியாக உனக்கு குளிர்ந்த காற்றை அனுப்பும்

"அடுத்த தலைமுறைக்கு சுத்தமான காற்றும், தண்ணீரும் கிடைக்க வேண்டும். அதற்கு அனைவரும் காடுகள் வளர்க்க தங்களால் இயன்ற சேவையை செய்ய வேண்டும்" என்று கூறுகிறார் சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 50 வயதான பாரதி.

ஆடு மேய்க்கும் தொழிலுடன், அருகில் உள்ளவீடுகளில் வீட்டு வேலைகளையும் செய்து வரும் இவர், காடு வளர்ப்பதற்காக செய்யும் சேவை மகத்தானது. அவரிடம் உரையாடியதிலிருந்து…

"நான் 13 ஆடுகளை வளர்க்கிறேன். ஆடு மேய்த்தும், வீட்டு வேலை செய்தும் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறேன். எனது கணவர் ஏழுமலை. அவருக்கு வலது கை சரியாகச் செயல்படாது என்பதால் எப்போதாவது வீடுகளுக்கு வண்ணம் தீட்டும் வேலைக்குச் செல்வார்.

என்னுடைய சிறு வயதில், எனது தாய்வழிப் பாட்டி ஆண்டாள், காடுகள் வளர்ப்பின் அவசியத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தார். "விதைப் பந்துகளைத் தயார்செய்து வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், அண்டை அயலாரிடம் கொடுத்தனுப்பி பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும்போது அவற்றை வெளியே வீசியெறியச் சொல்" என்று அறிவுறுத்தினார். அதன்படி சீதாப்பழம், எலுமிச்சை, வேம்பு, புளியமரம் ஆகியவற்றின் விதைகளை பானையில் சேகரித்து வைத்திருந்து, அவற்றை மாட்டு சாணம், செம்மண் ஆகியவற்றோடு கலந்து பந்து போல் தயாரித்து லேசான வெயிலில் காயவைத்து சேமித்து வைப்பேன். மழைக்காலத்திற்கு முன்பாக தொலைதூர பயணம் செல்பவர்களிடம் அவற்றைக் கொடுத்தனுப்பி தகுந்த இடங்களில் வீசியெறியச் சொல்வேன்.

இந்த சேவையை நீங்கள் எத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறீர்கள்?

நான் 20 ஆண்டுகளாக இதை செய்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சுகாதாரப் பணியாளராக வேலை செய்தேன். அப்போது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வருபவர்கள், திரும்பிச் செல்லும்போது அவர்களிடம் விதைப் பந்துகளைக் கொடுத்தனுப்புவேன். விபத்து காரணமாக எனது மகளுக்கு மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால், அவளை கவனித்துக்கொள்வதற்காக அந்த வேலையில் இருந்து விலகி விட்டேன். இருந்தாலும் இப்போதுவரை விதைப் பந்துகள் தயாரிப்பதை நான் நிறுத்தவில்லை.

இந்த பூமி குளிரவும், அடுத்த தலைமுறைக்கு சுத்தமான காற்றும், மழையும் கிடைக்கவும் என்னால் இயன்றதை செய்கிறேன் என்ற மன திருப்தி கிடைக்கிறது. 'மரங்களுக்கும் உணர்வு உண்டு. உன் கை ரேகை பதிந்த விதைகள் முளைத்து மரமான பின்பு நீ என்றாவது அந்த வழியில் சென்றால், அவை மகிழ்ச்சியாக உனக்கு குளிர்ந்த காற்றை அனுப்பும்' என்று என் பாட்டி சொல்வார். அதில் உண்மை இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அதை நான் நம்புகிறேன்.

சத்தமின்றி சமூகத்துக்கு சிறப்பான சேவை செய்யும் பாரதியை பாராட்டி விடைபெற்றோம்.


Next Story