வைக்கோலில் உருவாகும் ஓவியங்கள்


வைக்கோலில் உருவாகும் ஓவியங்கள்
x
தினத்தந்தி 30 July 2023 1:30 AM GMT (Updated: 30 July 2023 1:30 AM GMT)

வைக்கோலில் இருக்கும் முட்களை அகற்றி, அவற்றை மெல்லிய இழைகளாக கிழித்த பிறகுதான் நுணுக்கமாக கத்தரித்து விரும்பிய வடிவங்களை உருவாக்க முடியும். இதற்கு அதிக பொறுமை தேவைப்படும்.

'கற்பனையும், கலைத்திறனும் இருந்தால் எத்தகைய பொருளையும் கலை வடிவமாக மாற்றலாம்' என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் சென்னையில் வசிக்கும் மாலா. மாற்றுத்திறனாளியான இவர் மாட்டுத் தீவனமாக பயன்படும் வைக்கோலைக் கொண்டு பலவிதமான அழகிய ஓவியங்களை படைத்து வருகிறார். மாலாவின் கைவண்ணத்தில் உருவாகும் படைப்புகள், பலரது பாராட்டுகளையும், தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய 3 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்தன. வறுமையின் காரணமாக குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு காப்பகத்தில் வளர்ந்தார். தற்போது திருமணமாகி கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

வைக்கோலில் ஓவியங்கள் உருவாக்குவதை எப்படி கற்றீர்கள்?

நான் வளர்ந்த காப்பகத்தில், கைத்தொழில்களை கற்றுத்தந்தார்கள். அங்குதான் வைக்கோல் ஓவியங்களை கற்றேன். அங்கேயே இவற்றை தனிப்பட்ட முறையில் செய்யும் திறமையை வளர்த்துக்கொண்டேன்.

வைக்கோல் ஓவியங்கள் கேரள மாநிலத்தில்தான் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தில், இதை செய்பவர்களின் எண்ணிக்கை குறைவு. வைக்கோல் கிடைப்பது எளிது என்றாலும், அதைக் கொண்டு கைவேலைப்பாடுகள் செய்வது கடினமானதாக இருப்பதே இதற்கு காரணமாகும்.

வைக்கோலில் இருக்கும் முட்களை அகற்றி, அவற்றை மெல்லிய இழைகளாக கிழித்த பிறகுதான் நுணுக்கமாக கத்தரித்து விரும்பிய வடிவங்களை உருவாக்க முடியும். இதற்கு அதிக பொறுமை தேவைப்படும். என்னுடைய குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இருப்பதால் தற்போது, பகலில் இந்த வேலையை என்னால் செய்ய முடிவது இல்லை. இரவு நேரத்தில்தான் வைக்கோல் சுவரோவியங்களை உருவாக்குகிறேன்.

நீங்கள் உருவாக்கும் வைக்கோல் ஓவியங்களைப் பற்றி சொல்லுங்கள்?

ஆரம்பத்தில், இயற்கை காட்சிகள், விலங்குகள், பூக்கள் ஆகியவற்றை வைக்கோலில் ஓவியங்களாக உருவாக்கினேன். பின்னர் இந்தக் கலையை மேலும் ஆழமாக கற்றுக்கொண்டு, கடவுளின் உருவங்களை ஓவியங்களாக மாற்ற தொடங்கினேன். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது தலைவர்களின் உருவங்களை வைக்கோல் ஓவியங்களாக உருவாக்கி வருகிறேன்.

ஒரு வைக்கோல் ஓவியம் உருவாக்குவதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்?

வைக்கோல் ஓவியங்களை நுணுக்கமாகவும், கவனத்தோடும், நிதானமாகவும் உருவாக்க வேண்டும். ஓவியத்தின் தன்மை, அதன் நுணுக்கம் ஆகியவற்றை பொறுத்து 2 முதல் 5 நாட்கள் வரை தேவைப்படும்.

வைக்கோல் ஓவியங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

வைக்கோல் ஓவியங்களை வீடுகளில், வழக்கமான போட்டோ பிரேம்கள் போல் மாட்டி வைக்கலாம். இதற்கு தனிப்பட்ட பராமரிப்பு எதுவும் தேவை இல்லை. சுவரோவியங்கள் உருவாக்கும்போது பூச்சிகள், வண்டுகளால் ஓவியம் பாதிக்காத வகையில் பாதுகாப்பு முறைகளை பின்பற்றித்தான் தயார் செய்கிறோம். அதனால், 10 முதல் 15 ஆண்டுகள் கழித்தும் இவை புதிதுபோலவே இருக்கும்.

உங்கள் கலைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் பற்றி சொல்லுங்கள்?

மத்திய, மாநில அரசுகள் சார்பிலும், பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பிலும் சிறந்த கைவினை கலைஞருக்கான சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன். தனியார் கல்லூரி சார்பில் என்னுடைய கலைப்படைப்பை பாராட்டி அன்னை தெரசா விருது வழங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் உட்பட பல்வேறு தலைவர்களும் என்னை பாராட்டி பதக்கமும், விருதும் வழங்கியிருக்கிறார்கள்.


Next Story